இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 4
கல்லணையைப் பார்வையிட்ட உள நிறைவோடு மதுரையை நோக்கிய எமது பயணம் தொடங்கியது. பொதுவாக காலை நேரப் பயணங்களில் உற்சாக மிகுதியில் திளைத்திருக்கும் நாம் மாலைநேரப் பயணங்களில் உடல் சோர்ந்திருப்போம். பெரும்பாலும் அருகிலிருப்பவருடன் பேசிக்கொண்டே பயணவேளை கடந்து செல்லும். அவ்வேளைகளில் எமது குடும்பத்தவருடன் தொலைபேசியூடாக உரையாடுவதும் வழமையாகிப்போயிருந்தது.
இரவு எட்டு மணியளவில் மதுரை TTDC ஹோட்டலை அடைந்திருந்தோம்.
![](https://athavannews.com/wp-content/uploads/2025/02/Ek_rHsGUUAYH0yz-600x400.jpg)
முதல் நாளைப் போன்றே இணைப்பாளர்கள் எமக்கான அறைகளை ஒதுக்கித்தர இருவர் இருவராக அறைகளைப் பகிர்ந்து கொண்டோம். குளித்து உடைமாற்றி , இரவுணவை உண்டு முடித்ததும் மறுநாளைக்கான பயண ஒழுங்கு குறித்த தகவல் ‘ வாட்ஸ்அப்’ ஊடாக எம்மை வந்தடைந்திருந்தது.
மறுநாள் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவில்லம் மற்றும் அவரது வீட்டுக்குச் செல்ல இருக்கிறோம் என்பதுடன் சாகித்திய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவில்லம் செல்லப்போகிறோம் என்ற தகவலை அது வெளிப்படுத்தியது.
அச் செய்தி மகிழ்ச்சியின் உச்சத்திற்கே என்னைக் கொண்டு சென்றது. ‘பாரதி’ எனும் நாமம் கொண்ட நான், எனது பெயருக்குக் காரணமாகவிருந்த மகாகவியின் இல்லம் செல்லப்போகிறேன் என்பது உணர்வு பூர்வமான ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சந்தோச மிகுதியினால் துள்ளிக் குதித்தேன். நல்ல வேளையாக அறையில் எவருமில்லை. உடனடியாக இத்தகவலை அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் தோன்றியது.அழைப்பினை ஏற்படுத்தினேன்.
” அம்மா, நாளைக்கு நாங்க எங்க போகப்போறம் தெரியுமா ?.”
” சொன்னாத்தானே தெரியும் ?”
” நான் சொல்லமாட்டன் நீங்களே கண்டுபிடியுங்க பாப்பம்… நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறன் அம்மா”
” அது உன்ர குரலிலேயே தெரியுது. சொல்லு…எங்க போகப் போறீங்க? ”
” பாரதியார் வீட்டுக்குப் போகப்போறம் அம்மா.”
” மெய்யாகவா? …நீ அதிர்ஷ்டசாலி. அதனாலதான் அந்தப் பாக்கியம் உனக்குக் கிடைச்சிருக்கு”
” உங்களுக்கு என்மேல் பொறாமைதானே?”
” இலேசா…” எனச் சொல்லிவிட்டுச் சிரித்தார்.
அம்மாவுக்கு பாரதியாரின் பாடல்கள் என்றால் உயிர். எப்போதும் வீட்டில் பாரதியாரின் பாடல்களை ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். பாரதியின் சிந்தனைகளால் தான் கவரப்பட்டதால் கருவறையில் இருக்கும் போதே எனக்கு’பாரதி’ என நாமம் சூட்டி மகிழ்ந்ததாக பலதடவைகளில் என்னிடம் கூறியிருக்கின்றார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக என்னை வளர்த்தெடுப்பதில் பெருவிருப்புக் கொண்டிருந்தார். நிமிர்ந்த நன்னடை , நேர்கொண்ட பார்வை… இவை அனைத்தும் அவர் என்னிடம் எதிர்பார்த்த குணாதிசயங்கள்…
” நாளைக்கு அங்கு போனதும் ‘ வீடியோ கோல் ‘ எடுக்கிறன் அம்மா. நீங்களும் பாரதியாரின் வீட்டைப் பார்க்கலாம்… சரி அம்மா களைப்பாக இருக்கு நாளைக்கு கோல் பன்றன்”
அழைப்பைத் துண்டித்தேன்.அப்பாவுடன் பேசவில்லையே என்ற எண்ணம் பிறந்தது. திரும்பவும் அழைக்கலாம் என எண்ணியவேளை அப்பாவே அழைத்திருந்தார்.
” என்ன பாரதி, அப்பாவை மறந்திட்டியா ? ”
” இல்லப்பா, நான் ரொம்பவும் சந்தோசத்தில இருந்தனா அதுதான் தலை, கால் புரியல்ல”
“சரி, சரி .புரியுது , புரியுது. உன்ர கனவு மெய்ப்படப் போகுது. கவனமா போயிட்டு வா.”
” சரிப்பா, நான் நாளைக்கு கதைக்கிறனே.”
அழைப்பைத் துண்டித்தேன். இணையவழி எனது தேடலைத் தொடங்கினேன்.
எனது தேடலின் சுருக்கத்தை இங்கு தர விழைகிறேன்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (11.12. 1882 – 11.09.1921) 39 வருடங்கள்
இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளிற்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் எனினும் சிறுவயதில் சுப்பையா என்றே அழைக்கப்பட்டார்.
தனது 11வயதிலேயே கவிதையெழுதும் ஆற்றலைக் கொண்டிருந்தார். தமிழ்நாடு அமெரிக்க மிஷனில் பள்ளிப் படிப்பை முடித்தார்.1897ஆம் ஆண்டில் செல்லம்மாள் என்பவரைத் திருமணம் முடித்தார். இவருக்கு தங்கம்மா (1904) சகுந்தலா (1908) என்னும் இரு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
கவிதையில் சிறந்து விளங்கியமைக்காக எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் இவருக்குப் ‘பாரதி’ என்ற பட்டம் அளித்தனர். அக்காலத்தில் அறிவில் சிறந்த இல்லறத்தாருக்கு ‘ பாரதி’ எனும் பட்டமும் ஞானத்தில் உயர்ந்த துறவிகளுக்கு ‘சரஸ்வதி’ எனும் பட்டமும் வழங்கும் மரபு காணப்பட்டது. பாரதி, சரஸ்வதி இரண்டுமே கலைமகளைக் குறிக்கும் பெயர்களாகும்.
பாரதி தன்னை ‘ ஷெல்லிதாசன்’ என்று அழைத்துக் கொண்டார். இவர் தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி என அறியப்படுகிறார். தம் பாடல்களுக்குத் தானே மெட்டமைத்த கவிஞராகவும் கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞராகவும் அறியப்படுகிறார்.
1904இல் ‘சுதேச மித்திரன்’ இதழின் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1905இல் ‘சக்கரவர்த்தினி ‘ என்ற இதழைத் தொடங்கினார். 1907இல்’இந்தியா’ என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1908இல்’ கர்மயோகி’ , ‘ பாலபாரத் ‘ ஆகிய ஆங்கில இதழ்களை நடத்தினார். மதுரையிலுள்ள சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்,இந்தி , வங்காளம், பிரெஞ்சு , அரபு முதலான 14 மொழிகளில் புலமை பெற்றவர் பாரதி. சுதந்திரப் பாடல்கள், தேசியப்பாடல்கள், வசன கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் எனும் காவியங்களையும் எழுதியுள்ளார். பகவத் கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
தனது 20 வயதில் சுதந்திரத்துக்கான எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தை உலகறியச் செய்வதற்கும் , இந்தியாவின் அரசியல் நிலமையை மாற்றுவதற்குமாக இங்கிலாந்திற்குப் படிக்கச் சென்றார். அங்கு ‘கேம்பிரிஜ் ‘ பல்கலைக்கழகத்தில் இலக்கியம் , சட்டம், மற்றும் அரசியல் படித்தார். படிப்பை முடித்து நாடு திரும்பியதும் 1906இல் ‘ இந்தியா’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை வெளியிட்டார். இப்பத்திரிகையை அவர் வெளியிட்டதன் நோக்கம் விடுதலைப் போராட்டத்தை பிரபலப்படுத்தவும் பத்திரிகை மூலமாகத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தவுமே ஆகும்.
பிரித்தானியாவில் படித்து பிரித்தானியாவுக்கெதிராக விடுதலைக் கருத்துக்களை உலகுக்கு எடுத்துரைத்தார். அது மட்டுமன்றி வெளிநாடு சென்றதன் விளைவாக சமூக சீர்திருத்தம் , பெண்கல்வி, தேசிய எழுச்சி , ஜனநாயகம் , விடுதலைக்கான விழிப்புணர்வு, சாதி மறுப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு போன்றவற்றைத் தன் எழுத்துக்கள் வாயிலாக முன்வைத்தார்.
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை தனது ஞான குருவாகக் கொண்டிருந்தார். சீக்கியர்களைப் பார்த்து அவர்கள்போன்று தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார். அதன்மூலம் அவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
சுதந்திரப்போராட்டத்துக்கான கருத்துக்களை பத்திரிகையில் எழுதி வெளியிட்ட காரணத்துக்காக 1908இல் பிரித்தானிய அரசாங்கம் இவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்திருந்தது. இதனால் இவர் பிரெஞ்சுக் கட்டுப்பாட்டிலிருந்த பாண்டிச்சேரிக்குச் சென்று 1918 வரை ஏறத்தாழ 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.
பின்னர் இவர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்த காலத்தில் இவர் உடல் நலம் குன்றியிருந்தார். பின்னர் மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணியில் சிலகாலம் வாழ்ந்தார் . இக்காலத்தில் இவர் தினமும் உணவளிக்கும் பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு வைத்தியசிகிச்சை பெற்றார். எனினும் 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆந்திகதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்கள் கவிஞராகவும் தேசியவாதியாகவும் இருந்த பாரதியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள 14பேர் மட்டுமே இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
……………………….
பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்பு தொடர்பான தேடல் நிறைவடைந்ததும் எழுத்தாளர் கி. ரா தொடர்பான தேடலைத் தொடங்கினேன்.
கி.ராஜநாராயணன் (16.09.1923 – 17.05 .2021)
சாகித்திய அகாடமி விருதுபெற்ற தமிழ் எழுத்தாளரான கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியின் அருகிலுள்ள இடைச்செவல் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்தார்.
தந்தையார் பெயர் கிருஷ்ண ராமானுஜர். தாயார் பெயர் இலட்சுமி அம்மாள். குடும்பத்தின் ஐந்தாவது பிள்ளையான இவர் சிறுவயதில் உடல் நலக்குறைவால் அவதியுற்றார். ஏழாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டார். பின்னர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ)உறுப்பினரானார். 1947 மற்றும் 1951க்கு இடையில் அக்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் கிளர்ச்சிகளில் கலந்துகொண்டு ஆதரவளித்த காரணங்களுக்காக இரண்டுமுறை சிறைக்குச் சென்றார்.
சிறுவயதில் கதைப்புத்தகங்கள் வாசிக்கும் வழமையைக் கொண்டிருந்தார். 1959இல் சரஸ்வதி இதழில் வெளியான ‘ மாயமான்’ சிறுகதைமூலம் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். அக்கதை வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கதைகள் மூலம் இலக்கிய முயற்சியினைத் தொடர்ந்தார்.
கி.ரா வின் கதைகள் பொதுவாக அவரது சொந்தப் பகுதியான கரிசல் காட்டைச் சார்ந்தவை. கரிசல்நாட்டு மக்கள், அவர்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், போராட்டங்கள், மற்றும் நாட்டுப்புறக் கதைகளை , ஏமாற்றங்களையும் , வாழ்க்கைப் பாடுகளையும் மையமாகக் கொண்டவை.
இவ்விடத்தில் கரிசல் நிலம் என்பது தொடர்பான தெளிவுபடுத்தல் அவசியமாகிறது. கரிசல் நிலம் என்பது வரண்ட நிலத்தைக் குறிக்கும். தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் காணப்படும் ‘விருது நகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி‘ இவையாவும் கரிசல் நிலத்தில் அடங்கும். குறைந்த மழை பொழிவு மற்றும் விவசாயம் செய்வதில் சிரமம் என்பன இம்மண்ணுக்கே உண்டான பிரச்சனைகள் ஆகும். அதனால் ராகி, மக்காச்சோழம் ,கவுனி அரிசி போன்றவை செய்கை பண்ணப்படுகின்றன. கோடைகாலத்தில் கடுமையான வெயிலும் குளிர் காலத்தில் கடுமையான குளிரும் காணப்படும். விவசாயத்துடன் கால்நடைவளர்ப்பும் கூலித்தொழிலும் மக்களின் வாழ்வாதாரமாகக் கொள்ளப்படுகிறது.
கரிசல் நிலமக்களின் வாழ்வியலை மையமாகக்கொண்டு எழுதப்படும் இலக்கியம் கரிசல் இலக்கியமாகும். இம்மக்களின் வாழ்வை மையப்படுத்தியதாக இலக்கியம் படைத்ததனால் கரிசல் இலக்கியத்தின் தந்தை என கி.ரா அழைக்கப்படுகிறார்.
இவரது படைப்புக்களில் மண்ணோடு இணைந்த பழமொழிகள் காணப்படுவது குறிப்பிட்டுக்கூறக்கூடிய சிறப்பம்சம் ஆகும்.
வறுமை, மற்றும் போராட்டத்தைப் பற்றிய பழமொழிகளில் நகைச்சுவையணர்வு தொங்கி நிற்கும். உதாரணத்துக்கு ஒன்றிரண்டை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.’ கையில காசிருந்தா கையாணம்கூட (கல்யாணம்கூட) மூணு தடவை நடக்கும்.‘, ‘வெய்யிலில் வைத்தால் வெங்காயம் , நிழலில் வைத்தால் மொங்காயம் ‘(சோர்ந்து அழுகும் நிலை) அதாவது வெங்காயத்தை வெய்யிலில் வைத்தால் அது வரண்டு உறுதியாகும். நிழலில் வைத்தால் அது புழுங்கி மெலிந்து அழுகிவிடும். இதிலிருந்து கூறவருவது உழைத்துப் போராடினால் உறுதிவரும். ஆனால் சோம்பலாக இருந்தால் உருப்பட முடியாது.
கி.ரா எழுத்தில் கொண்டுவந்த புரட்சி கரிசல் மண்ணின் பேச்சுவழக்கை தனது இலக்கியங்களில் கொண்டுவந்ததோடு நிற்காமல் பின்வந்த எழுத்தாளர்களும் அந்த மொழிநடையைக் கற்றுக்கொள்ளச் செய்ததாகும்..
கோபல்ல கிராமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை இவரது மிகவும் பாராட்டப்பட்ட புதினங்களாகும். பிந்தைய புதினம் இவருக்கு 1991இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பலரின் கதைகளை இந்த புதினம் கையாளுகிறது. தமிழ் நாட்டின் வடக்கேயிருந்த கொடூரமான இராச்சியங்களிலிருந்து தப்பித்த தெலுங்கு மக்கள் தெற்கே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து குடியேறுவதை விவரிக்கிறது.
ஒரு நாட்டுப்புறவியலாளராக கி.ரா பல தசாப்தங்கள் கரிசல் வட்டாரத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து பிரபல பத்திரிகைகளில் வெளியிட்டார். 2007இல் தஞ்சாவூரைச் சேர்ந்த அன்னம் என்ற பதிப்பகம் இந்த நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்ற பெயரில் 944 பக்க புத்தகமாக வெளியிட்டது. 2009வரை இவர் சுமார் 30 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இப்புத்தகங்களில் சில ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இத்தோடு கி.ரா அவர்களின் இலக்கியப்பயணம் தொடர்பான அறிமுகக் குறிப்பை முடித்துக்கொண்டு பயண அனுபவங்களுக்குள் உங்களை அழைத்துச் செல்ல முனைகிறேன்.
………………………..
31.12.2024 அன்று காலை …
கல்லூரி மாணவர்கள் இணைந்து உல்லாசப்பயணம் மேற்கொண்டால், அந்தப் பயணம் பாட்டு, கைதட்டல் என்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் எவ்வாறு உற்சாகமாகவும் , கலகலப்பாகவும் இருக்குமோ அவ்வாறே மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கிய ‘ வேர்களைத்தேடி…’ பண்பாட்டுப் பயணமும் அமைந்திருந்தது.
பஸ்ஸில் ஏறி காலியாகக் கிடந்த இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டதும். சில நிமிடங்களில பாரதியாரின் உருவம் பொறித்த ‘ டீ சேர்ட்டை ‘ அணிந்திருந்த இளைஞர் ஒருவர் எனது அருகில் வந்து அமரந்தார். அவரை ‘ வேர்களைத் தேடி…’ ஆரம்ப நிகழ்வில் நான் அவதானித்திருந்தபோதிலும் பேசிப்பழகுவதற்கான சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை.
ஆரம்ப நிகழ்வின்போது அவர் ‘பி.எச்.டி ‘ மாணவர் எனத் தன்னை அறிமுகம் செய்திருந்ததால் எனக்கு அவர்மீது மரியாதை ஏற்பட்டிருந்தது. இப்போது அவர் அணிந்திருந்த ‘டீ சேர்ட் ‘ என்னைப்போன்று பாரதிமீது ஈர்ப்புக்கொண்டுள்ள ஒருவராக அவரை அடையாளம் காட்டியது..பேசிப் பழகுவதற்கான ஆர்வம் பிறந்தது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து வருகைதந்திருந்த மாணவரான பத்மப்பிரியன் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அவுஸ்திரேலியா சென்றதாகவும் எலக்ரோனிக் பாடத்தில் University of Queensland இல் 3ஆம் வருட மாணவராகக் கற்றுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையர் என்ற ரீதியில் சகோதரர் ஒருவருடன் பயணிப்பதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. மகாகவி பாரதி தொடர்பாக நிறைய விடயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். அவர் பேசப்பேச எனக்கு அவர்மீது பெரிய மரியாதை ஏற்பட்டது.பின்னாளில் அந்த மரியாதையே ஆழமான சகோதர பாசமாக உருமாறப்போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
![](https://athavannews.com/wp-content/uploads/2025/02/a1eaf044-f958-49ab-b7ef-92a369e46ba4-e1739364159212-600x436.jpg)
எமது பயணத்தின்போது கூடவே வந்திருந்த சுற்றுலாத்துறை அதிகாரியான திருவாளர் கணேஸ் அவர்கள் ஒலிவாங்கியின் ஊடாக அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.
” எம்முடன் பாரதியாரின் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்…” என்று அவர் கூறியதும் ஆச்சரியத்தினாலும் மகிழ்ச்சியினாலும் எமது கண்கள் விரிந்தன. யார் அவர்? என அறியும் ஆவல் ஏற்பட்டது.
” அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருக்கும் இனியன் (வயது 20) என்பவரே அவர் என அறிமுகஞ் செய்தார். மகாகவி பாரதியின் இல்லத்திற்குச் செல்லும் நாம் அவருடைய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவருடன் பயணஞ் செய்யவிருப்பது எமக்கு விசேடமான அனுபவமாகத் தோன்றியது..
பத்மப் பிரியன் அவர்கள் தான் காலையில் இனியனோடு பேசிக்கொண்டிருந்த பொழுது பேச்சுவாக்கில் தன்னிடமே இத்தகவலை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.
” உண்மையில் இனியன் அவர்கள் பெருமை பாராட்டும் வகையில் இதனைத் தெரிவிக்கவில்லையென்றும் பேச்சுவாக்கிலே குறிப்பிட்டதாகவும் தான் இதனை திரு கணேஸ் அவர்களிடம் கூறப்போய் இது பெரிய விடயமாக ஆகிவிட்டதென்றும் குறிப்பிட்டார்.
காலை 11 மணியளவில் நாம் பாரதியாரின் ஆவணக் காப்பகத்தை வந்தடைந்திருந்தோம்.
அழகான கட்டடம் ஒன்று நினைவில்லமாக மாற்றப்பட்டிருந்தது. மண்டபத்தில் தங்க நிறத்திலான பாரதியின் சிலையொன்று. …சிலையின் கீழே பல வண்ணங்களில் நிறம் மாறிக்கொண்டிருக்கும் மின் விளக்குகள்… நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாற பாரதியின் குணமும் மாறுகிறதோ என்ற பிரமை தோன்றியது.
சுவர்களில் பாரதியின் கவிதைகள்…ஒலி வடிவில் செவிக்கினிமைபயக்கும் பாரதி பாடல்கள் …. காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாரதியின் அரிதான புகைப்படங்கள்… அவர் எழுதிய கடிதங்கள்… வாழ்க்கை வரலாறு….
கண்கள் பனிக்க ஒவ்வொன்றாகப் பார்வையிட்டு வந்தபோது அம்மாவின் ஞாபகமும் கூடவே வந்தது. அடுத்த தடவை தமிழகம் வரும்போது அவரை இங்கு அழைத்து வரவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
பார்வையிட்டு முடிந்ததும் பாரதியின் எட்டயபுர இல்லத்திற்குச் செல்வதற்குத் தயாரானோம்.குறித்த அளவு தூரத்தை அடைந்ததும் பாதை குறுகலானதாக அமைந்திருந்ததால் தெருவில் இறங்கி நடந்து சென்றோம்.
ஏனோ இப்போது நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. உலகத்தமிழர்கள் அனைவரும் வியந்து போற்றுகின்ற ஒரு மகாகவி பிறந்து, வளர்ந்த வீட்டில் எனது காலடிகள் பதியப் போகின்றன என்ற எண்ணம் காற்றில் பறப்பது போன்றதொரு உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. சில நிமிட நடையின் பின்னர் பாரதி வாழ்ந்த அந்த கலைக்கோயிலின் தரிசனம் எமக்குக் கிடைத்தது.
பாரதியின் இல்லத்தில் அவரது வாழ்க்கை தொடர்பான பதிவுகள் அனைத்தும் பேணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. அவரது படைப்புகள் , பணிகள் , புகைப்படங்கள் , கடிதங்கள், பத்திரிகைகள் , வரலாற்று ஆவணங்கள் அனைத்துமே’ பாரதி’ எனும் கலைக்காற்றை சுவாசிக்கச் செய்தன. பாரதி தொடர்பான எமது அறிவு பரந்து விசாலமானது.
தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த உயரியதொரு கவிஞராக அவர் எனக்குத் தோன்றினார்.
அம்மாவிற்கு வாக்குக் கொடுத்தபடி வீடியோ அழைப்பினூடாக பாரதியின் இல்லத்தைச் சுற்றிக்காட்டினேன். அதன்மூலம் ஒருவித மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. அம்மாவும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்திருப்பார் என என்னால் ஊகித்து உணர முடிந்தது.
பாரதியின் சிலைக்கு அருகில் நின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
பாரதியின் இல்லத்தை பராமரித்து பார்வையிட வருவோருக்கான தகவல்களை வழங்க பணிக்கு ஆட்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களினூடாக நாம் பாரதி தொடர்பாகப் பெற்றிருந்த அறிவுக்கு மேலதிகமாகப் பல விடயங்களை உள்வாங்க முடிந்தது.
மகாகவி பாரதியாரின் இல்லத்திலிருந்து பொக்கிஷமான நினைவுகளைச் சுமந்து நாம் புறப்பட்டபோது என்மனதில் வினாவொன்று தோன்றியது. .பாரதியால் தமிழ் உயர்ந்ததா? தமிழால் பாரதி உயர்ந்தாரா?
பாரதியார் இல்லம் சென்று வரும் வழியில் கோவில் பட்டி என்னும் இடத்தில் கடலை மிட்டாயத் தொழிற்சாலையொன்றினைப் பார்வையிட வாய்ப்புக்கிட்டியது. சிறிய அளவிலான தொழிற்சாலை ஒன்றுதான் எனினும் நிறைய இடங்களுக்கு விநியோகம் இடம்பெறுவதாகக் கூறப்பட்டது. பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் அங்கு விற்பனைக்கிருந்த நிலக்கடலை சார்ந்த உற்பத்திப் பொருட்களை வாங்கி சுவைத்து மகிழ்ந்தது மறக்க முடியாத தருணங்கள்.
எமக்கான மதிய உணவு ‘ சில்வர் ஸ்ரோன்’ ஹோட்டலில் தயாராக இருந்தது. இந்த ஹோட்டலின் வெளிப்புற அழகு பிரமாண்டமானதாக இருந்ததைப்போன்று அங்கு வழங்கப்பட்ட உணவின் சுவையும் தரமும் நிறைவாக இருந்தன.நானும் எனது அவுஸ்திரேலியத் தோழி கேசினியும் இக் ஹோட்டல் முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
கேசினி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ‘ வேர்களைத்தேடி…’ நிகழ்ச்சிக்காக வருகை தந்தவர்.சம வயது கொண்டவர்.வங்கியொன்றில் ‘பிஸ்னெஸ் அனலிஸ்ட் ‘ ஆகப் பணிபுரிந்து வருகிறார். நன்றாகத் தமிழ் பேசினார்.இவரது பெற்றோர் இலங்கைத் தமிழர் எனக்குறிப்பிட்டார்.
![](https://athavannews.com/wp-content/uploads/2025/02/03e57c05-40a4-4ed8-9317-e1be81edf97c-450x600.jpg)
தான் இந்நிகழ்ச்சி தொடர்பாக அறிந்திருந்ததாகவும் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தரிசிப்பதில் தனக்குண்டான ஆர்வத்தையும் , தமிழர் கலாசாரத்தில் தனக்குண்டான பற்றுதலையும் வெளிப்படுத்தினார்.
பத்மபிரியன் அண்ணாவைப் போல கேசினியும் ஈழத்து மண்ணின் வாரிசுகள் என்ற வகையில் என்னையறியாமலே எனக்குள் ஒரு உறவுப்பாலம் கட்டியெழுப்பப்பட்டதைப் புரிந்து கொண்டேன்.
மாலை மூத்த எழுத்தாளர் கி. ரா அவர்களின் நினைவில்லம் சென்றோம். அந்த நினைவில்லம் நவீன முறையில் அமைக்கப்பட்டிருந்தது. வாசலை பல படைப்பாளிகளின் உருவச் சிலைகள் அலங்கரித்தன. மிகப்பிந்திய காலத்தில் அமைக்கப்பட்ட மண்டபமாதலால் நவீனம் பளிச்சிட்டது.
அங்கு கோவில்பட்டி தாசில்தார் அவர்களால் வரவேற்கப்பட்டோம். கி. ரா வின் படைப்புகள் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை அறிய முடிந்தது. அத்துடன் நினைவில்லத்தில் கி. ரா வின் படைப்புகள், மற்றும் அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
![](https://athavannews.com/wp-content/uploads/2025/02/d9e410bb-bedb-4f42-862e-26e036774ab0-600x450.jpg)
அதுமட்டுமல்லாது அங்கு கி. ரா வின் சீடரும், புகழ் பெற்ற எழுத்தாளருமான சோ. தர்மன் ஐயா அவர்களையும் சந்தித்து அளவளாவும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிட்டியது.
![](https://athavannews.com/wp-content/uploads/2025/02/bd848637-a901-4700-b7d4-202a3a7bbcb8-600x400.jpg)
பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கும் திரு சோ. தர்மன் ஐயா அவர்கள் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவராவார். குறிப்பாக கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் அவரும் ஒருவர். இதுவரை 13 நூல்களை அவர் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாது இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை ஆகியவற்றில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்திய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
” நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்.” என்று சொல்லும் கி.ரா வைப் புதுவைப் பல்கலைக்கழகம் பேராசிரியராக்கிப் பெருமையடைந்துள்ளது என்ற தகவலை அறிந்தபோது மனம் சிலிர்த்துப் போனது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேநீர் உபசாரத்துடன் நாங்கள் கிராவின் நினைவு இல்லத்தில் இருந்து விடைபெற்றோம்.
தமிழகத்தின் இரு பெரிய இலக்கிய கர்த்தாக்களின் நினைவில்லங்களைத் தரிசித்து அவர்களின் பெறுமதியை அறிந்து உடல் சிலிர்த்துப்போன அனுபவங்களைச் சுமந்துகொண்டு கன்னியாகுமரிக்கான எமது பயணம் தொடங்கியது.
புதுவருடத்தை புதிய உறவுகளுடன் புதியதொரு இடத்தில் சந்திக்கப்போகும் உணர்வுகளுடன் கன்னியாகுமரி நோக்கிப் புறப்பட்டோம். கன்னியாகுமரியில் எமக்கு காத்திருந்த சுவையான அனுபவங்களை அடுத்த வாரத்தில் கண்டு மகிழலாம்.
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம்! -03 https://athavannews.com/2025/1419719