கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமராகவும் மகத்தான வெற்றியைப் பெற்ற முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி, திங்களன்று (10) பதவி விலகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துப் பேசினார்.
இதன்போது, அதிகாரத்தை முறையாக ஒப்படைப்பது விரைவில் நடைபெறும் என்று மார்க் கார்னி கூறினார்.
நீண்டகால கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்ள கார்னி சிறந்த நபராக இருப்பார் என்று லிபரல் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வெளியிட்டனர்.
ட்ரம்ப் கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக இணைப்பது குறித்து அவர் அச்சுறுத்தியதுடன், வர்த்தகப் போரைத் தொடங்கி நீண்டகால கூட்டாளியின் மீது வரிகளை விதிக்கவும் அச்சுறுத்தியுள்ளார்.
கார்னி முறையாகப் பொறுப்பேற்கும் வரை ட்ரூடோ பிரதமராக கடமையாற்றுவார்.
இதனிடையே ட்ரூடோவை சந்தித்த பின்னர்,
“அந்த மாற்றம் தடையின்றி நடைபெறும், அது விரைவாக நடக்கும்” என்று கார்னி கூறினார்.
அதேநேரம், வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை கார்னி பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கனடாவின் குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
திங்களன்று லிபரல் நாடாளுமன்றக் குழுவையும் சந்தித்த கார்னி, விரைவில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்று லிபரல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான கனடா மீது வரிகளை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை கனடாவில் கோபமான எதிர்வினையைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.