வடகிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவத்திற்காக ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் கப்பல் ஒரு கொள்கலன் கப்பலுடன் திங்கட்கிழமை (10) மோதி விபத்துக்குள்ளானது.
இந்த மோதலில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தது.
இதனால் பல வெடிப்புகள் ஏற்பட்டதுடன், இரு குழுவினரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பல்லாயிரக்கணக்கான தொன் ஜெட் எரிபொருளை சுமந்து செல்லக்கூடிய அந்த டேங்கர் கப்பல், சிறிய கொள்கலன் கப்பல் மோதியபோது நங்கூரமிட்டிருந்ததாகவும், அதன் சரக்கு தொட்டி உடைந்து கடலில் எரிபொருளை வெளியிட்டதாகவும் அதன் இயக்குநரான ஸ்டெனா பல்க் கூறினார்.
இந்த சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது பிற நபர்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
பிரித்தானியாவின் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில், விபத்தினை அடுத்து 36 பணியாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.
போர்த்துகீசியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான சோலாங் (Solong) இன் குழு உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி முடிவடைந்துள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க தளவாடக் குழுவான க்ரௌலியால் இயக்கப்படும் ஸ்டெனா இம்மாகுலேட் (Stena Immaculate) என்ற டேங்கர் கப்பல், ஜெட்-ஏ1 எரிபொருளை ஏற்றிச் சென்றபோது, நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலான சோலாங்கில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த டேங்கர் கப்பல் அமெரிக்க அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும், தேவைப்படும்போது ஆயுதப் படைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய அணுகுமுறையை திறக்கிறது என்று அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட சோலாங் கப்பலின் உரிமையாளர் எர்ன்ஸ்ட் ரஸ், கப்பல் பிரித்தானிய கடற்கரையான ஹம்பர்சைடில் இருந்து வடக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, GMT 10.00 மணிக்கு ஸ்டெனா இம்மாகுலேட்டுடன் மோதியதாக குறிப்பிட்டார்.
மோதலின் தாக்கத்திலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் இரு கப்பல்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன.
சோலாங் கப்பலில் இருந்த 14 பேரில் 13 பேர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காணாமல் போன குழு உறுப்பினரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
கடற்படை தரவு வழங்குநர்களின் விபத்து தொடர்பான அறிக்கையின்படி, சோலாங் கப்பலில் 15 கொள்கலன்களில் சோடியம் சயனைடு, முக்கியமாக தங்கச் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் மற்றும் அறியப்படாத அளவு ஆல்கஹால் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே, திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஒரு ஹெலிகொப்டர், நிலையான இறக்கை விமானம், உயிர்காக்கும் படகுகள் மற்றும் தீயணைப்பு திறன் கொண்ட கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.