முன்னர் டுவிட்டர் என அழைக்கப்பட்ட எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் திங்கட்கிழமை (10) காலை முழுவதும் பெரும் செயலிழப்புகளை சந்தித்தது.
இதனால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான அதன் பயனாளர்கள் பாதிப்படைந்தனர்.
இது குறித்து எக்ஸ் பதிவில் பில்லியனர் எலோன் மஸ்க், திங்களன்று, சமூக ஊடக தளம் “பாரிய சைபர் தாக்குதலுக்கு” இலக்காகியதாகக் கூறினார்.
தளத்தை பாதிக்கும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து அமெரிக்க பயனர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகளை பதிவு செய்ததாக தள கண்காணிப்பாளரான டவுன்டெக்டர் கூறியது.
திங்கட்கிழமை GMT 2:00 மணிக்கு இங்கிலாந்து பயனர்களிடமிருந்து 8,000 க்கும் மேற்பட்ட செயலிழப்பு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேன் பகுதியில் தோன்றிய “பாரிய சைபர் தாக்குதலிலிருந்து” இந்த செயலிழப்புகள் ஏற்பட்டதாக எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உக்ரேனையும் அதன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் அடிக்கடி விமர்சித்து வரும் தொழில்நுட்ப பில்லியனர், இந்தக் கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
எனினும், சில சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், தாக்குதல் உக்ரேனில் தொடங்கியது என்று அர்த்தமல்ல என்று வலியுறுத்தினர்.