முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலக வளாகத்தில் சோதனை நடத்தினர்.
மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (11) பிறப்பித்த திறந்த பிடியாணை உத்தரவினைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த உத்தரவுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் எங்கு காணப்பட்டாலும் உடனடியாக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (12) விசாரணைக்கு வந்துள்ளது.
ரிட் மனு தொடர்பான முடிவு எதிர்வரம் மார்ச் 17 அன்று வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.
கடந்த வாரம், தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதவான் உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.