அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பொலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், பஞ்சாப் பொலிஸார் நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று போக்குவரத்துக்கு தடையாக இருந்த தடுப்பான்களை அகற்றியதோடு, புல்டோசர்களை கொண்டும் அவற்றை இடித்துத் தள்ளியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கிய விவசாய தலைவர்களான ஜெகஜீத் சிங் தல்லேவால், சர்வன் சிங் பாந்தர் உள்ளிட்டோரை பொலிஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஷம்பு எல்லையில் இன்று காலை அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் எதிரொலியாக,உள்ளூர் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.