அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது.
கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களில் பனிப்போர் காலத்தில் சிஐஏயின் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் காணப்படுகின்றன அதில் இலங்கை உட்பட பல நாடுகளில் சிஐஏயின் இரகசிய தளம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இது இலங்கை அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் தொடர்பிலும் பேசப்படுகின்றதுடன் 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது