இந்த ஆண்டின் தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனடா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இரட்டைக் குடிமக்கள், மேலும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி புதன்கிழமை (19) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தண்டனைகள் “மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்திற்கு முரணானவை” என்று அவர் கண்டனம் செய்தார்.
இதேவேளை, கனேடிய குடிமக்களின் குற்றங்களுக்கான சான்றுகள் “உறுதியானவை மற்றும் போதுமானவை” என்று கூறிய, கனடாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ஒட்டாவா “பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
மேலும், “சம்பந்தப்பட்ட கனேடிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பீஜிங் முழுமையாக உத்தரவாதம் செய்துள்ளது” என்றும், “சீனாவின் நீதித்துறை இறையாண்மையை” மதிக்க கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை, மேலும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது.
போதைப்பொருள், ஊழல் மற்றும் உளவு பார்த்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு சீனா மரண தண்டனை விதிக்கிறது. மரணதண்டனைகளின் எண்ணிக்கை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், உலகிலேயே அதிக மரணதண்டனை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று என்று மனித உரிமைகள் குழுக்கள் நம்புகின்றன.