கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கருணாநிதி மறைந்துவிட்டதால் அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (25) அனுமதித்தது.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வசம் இருந்தது கச்சத்தீவு. ஆனால் மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தாரைவார்த்தது.
கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதால் தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை இருந்த போதும் எல்லை தாண்டிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி தற்போதும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நெடுநாள் முழக்கம்.
தமிழ்நாடு சட்டசபையிலும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவு மீட்புக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இறுதியாக விசாரிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது ஜெயலலிதா காலமானார்.
இதனால் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதேபோல கருணாநிதி மறைந்த நிலையில் அவருக்கு பதில் திமுக பொருளாளர் டிஆர் பாலு தம்மை மனுதாரராக சேர்க்க கோரியிருந்தார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் நேற்று கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரர்களில் ஒருவராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் கச்சத்தீவு மீட்பு தொடர்பான இந்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.