பதவி இடைநிறுத்தப்பட்டு சிறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இதில் 115 நாடளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
2002ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய இந்தத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர்களான மஹிந்த ஜயசிங்க, எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன மற்றும் (சட்டத்தரணி) உபுல் அபேவிக்ரம ஆகியோர் இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.