தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.
காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசாலை முறைகேடு தொடர்பாக தீர்மானம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்,மீனவர்கள் போராட்டத்திற்கு தீர்வு: அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினைக்க்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும், கூட்டணி அமைப்பு, கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றியிருந்தார்.
டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.
அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.
இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என தனது உரையில் கூறினார்.