2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த ஆட்டமானது இன்று இரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்துள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சீசன் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ வலுவான மீள் வருகை தந்தது.
அந்தப் போட்டியில் ஷர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதே நேரத்தில் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்து, 23 பந்துகள் மீதமுள்ள நிலையில் 191 ஓட்ட இலக்கை நோக்கி முன்னேற வழிவகுத்தார்.
மறுபுறம் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐ.பி.எல். தொடரைத் தொடங்கியது.
ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 பந்துகளில் 97 ஓட்டங்களை எடுத்தார்.
பிரியான்ஷ் ஆர்யா (23 பந்துகளில் 47 ஓட்டம்) மற்றும் ஷஷாங்க் சிங் (16 பந்துகளில் 44 ஓட்டம்) ஆகியோரும் பஞ்சாப் அணியை 243 ஓட்டங்களை குவிக்க உதவினார்கள்.
பின்னர், குஜராத் அணியை 232 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி போட்டியை வென்றனர்.
இந்த சீசனில் முதல் முறையாக சொந்த மைதானத்தில் விளையாடும் லக்னோ அணி, வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்று நம்பும் அதே வேளையில், பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் நோக்குடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணுகின்றது.
ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் இதுவரை 04 முறை ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் லக்னோ நான்கு வெற்றிகையும், பஞ்சாப் ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன.