2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று நடந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார்.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி, இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவர்கள் தழுவிய இரண்டாவது தோல்வியாகும் இது.
வெற்றிக்குப் பின்னர் பின்னர் பஞ்சாப், ஷ்ரேயாஸ் அய்யரின் செயல்திறனை சமூக ஊடகங்களில் கொண்டாடியதுடன், லக்னோ தலைவர் ரிஷப் பந்தையும் கடுமையாக விமர்சித்தது.
லக்னோவில் அமைந்துள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியானது, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 44 ஓட்டங்களையும், ஆயுஷ் படோனி 33 பந்துகளில் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பின்னர் இலக்கினை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது, 22 பந்துகள் மீதமிருந்த நிலையில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் ஒருமுறை அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணித் தலவைர் ஷ்ரேயாஸ் அய்யர் (30 பந்துகளில் 52 ஓட்டம்) தனது சிறப்பான ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 69 ஓட்டங்களை எடுத்தார், நேஹல் வதேரா 25 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி, இரண்டு போட்டிகளில் இருந்து நான்கு புள்ளிகளைப் பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுடன் இணைந்தது.
ஆனால், நிகர ஓட்ட விகிதத்துடன் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
ஏப்ரல் 05 ஆம் திகதி நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.