தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் யூன் சுக் இயோலை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து, ஜூன் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று அதன் பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியூட்டும் வகையில் இராணுவச் சட்டப் பிரகடனத்திற்காக யூன் மீது டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஏப்ரல் 4 ஆம் திகதி நீதிமன்றம் அவரது குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.
இது 60 நாட்களுக்குள் ஒரு திடீர் தேர்தலுக்கு வழி வகுத்தது.
யூனின் இராணுவச் சட்டப் பிரகடனம் தென் கொரியாவை அரசியல் நிச்சயமற்ற தன்மையில் ஆழமாக மூழ்கடித்தது மற்றும் அதன் சமூகத்தில் ஆழமான பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளத் தேர்தலுக்காக சில அரசியல்வாதிகள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதில் தொழிலாளர் அமைச்சர் கிம் மூன்-சூவும் ஒருவர்.
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட ஆளும் மக்கள் சக்தி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அஹ்ன் சியோல்-சூவும் களத்தில் இறங்கியுள்ளார்.
ஆனால் தற்போதைய முன்னணியில் இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் ஆவார்.
அவர் 2022 இல் நாடு கண்ட மிகக் கடுமையான போட்டியில் யூனிடம் தோல்வியடைந்தார்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் லீ 34% ஆதரவினை பெற்றுள்ளார்.
தென் கொரியா தனது அரசியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த கடுமையான வரிகள் போன்ற புதிய பொருளாதார சவால்களையும் அது எதிர்கொள்கிறது.
தென் கொரியா அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளுக்கு 25% வரியை எதிர்கொள்கிறது, மேலும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயற்சிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.