ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கோயில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோயிலில் இன்று அதிகாலை இடம்பெற்ற சந்தன உற்சவ விழாவின்போதே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும், அங்கு பெய்து வரும் கனமழை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தனது x தளத்தில் கவலை வெளியிட்டுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதித் தொகையும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.