இந்திய இராணுவ வலைதளங்களை பாகிஸ்தானைச் சேர்ந்த சைபர் குழுக்கள் குறிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக இந்திய இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில், இது பாகிஸ்தானின் செயலாக இருக்குமோ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவின் ஏராளமான இணையதளங்கள், முக்கியமாக கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கப்பட்டு சமீப நாட்களில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருகின்றன. இதில் இராணுவம் தொடர்பான நிறுவனங்களின் தளங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஏ.பி.எஸ். நாக்ரோட்டா, ஏ.பி.எஸ். சஞ்சுவான் உள்ளிட்ட 4 ராணுவ பாடசாலைகளின் இணையதளங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் காஷ்மீரில் இயங்குபவை ஆகும். இதைப்போல இராணுவ அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம் ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் ஜலந்தரில் உள்ள ராணுவ நர்சிங் கல்லூரியின் வலைத்தளம் கடந்த25ஆம் திகதி ஹேக் செய்யப்பட்டது. இந்த இணையதளம் நேற்று காலை வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இப் பாடசாலைகள் மற்றும் கல்லூரி அனைத்தும் ராணுவ நல கல்வி சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருபவை ஆகும்.
இதைத்தவிர டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் இணையதளமும் முடக்கத்துக்கு ஆளானதாக தகவல் வெளியானது. ஆனால் இதை உயர் அதிகாரிகள் மறுத்தனர்.
சைபர் தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான்
கல்வி நிறுவனங்கள்உட்பட இந்திய நிறுவனங்களின் இணையதளங்கள் மீதான இந்த சைபர் தாக்குதல் பெரும்பாலும் கடந்த 22-ம் ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகுதான் அதிக அளவில் நடந்து உள்ளன.எனவே இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசை இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே மேற்படி சைபர் தாக்குதல்களுக்கு எதிராக தகுந்த மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இராணுவத்தில் உள்ள பாதுகாப்பு நிபுணர்கள் தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
மேலும் எல்லை தாண்டிய சக்திகளின் நிதியுதவியுடன் செய்யப்படக்கூடிய கூடுதல் சைபர் தாக்குதல்களை கண்டறிய சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் நிறுவனங்களும் சைபர்ஸ்பேஸை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.