தென்னிந்திய திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்த்தல் மற்றும் இலங்கைத் திரைத்துறையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரது துணைவி மீனாட்சி நாராயணன், கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா, ஜெகத் மனோகரன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இலங்கையின் கலைத்துறைக்கு இந்திய தரப்பின் பங்களிப்பு மற்றும் முதலீடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், திரைத் துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல் மட்டுமல்லாது வட மாகாணத்தில் திரைத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ”வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ”கலைதுறை சார்ந்த விடயங்களில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் இது குறித்து இந்திய கலைத்துறையில் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறும்” அமைச்சர் சந்திரசேகர் சந்தோஷ் நாராயணிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.