அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியான ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை (02) ஆயுள் தண்டனை விதித்தது.
அதன்படி, 19 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக ஞானசேகரன் குறைந்தது 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.
பாலியல் வன்புணர்வு உட்பட 11 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று அறிவித்த நான்கு நாட்களுக்குப் பின்னர் மகிளா நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், 90,000 இந்திய ரூபா அபராதமும் விதித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர், வளாகத்திற்குள் நுழைந்து, ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு பெண் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் சம்பவத்தை வீடியோ எடுத்து இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.
இது தொடர்பில் கடந்த டிசம்பர் 24 அன்று, சென்னை, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் முறைப்பாடு அளித்தார்.
அதில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ஆண் நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் தன்னை மிரட்டி பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
அரசுத் தரப்பு படி, ஞானசேகரன் தனது மொபைல் போனில் இந்த சம்பவத்தை பதிவு செய்தார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் டிசம்பர் 26 அன்று பொதுவெளியில் கசிந்ததால், இந்த வழக்கை விசாரிக்க சென்னை மேல் நீதிமன்றம் அனைத்து மகளிர் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தமையும் குறிப்பிடத்தக்கது.