2020 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி சூதாட்டக் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனநாயக்க ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இலங்கையின் ஊழல் எதிர்ப்பு விளையாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான பெருமையைப் பெற்றுள்ளார்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சேனநாயக்க, எல்.பி.எல்.லின் தொடக்க சீசனின் போது, கொழும்பு கிங்ஸ் வீரர் தரிந்து ரத்நாயக்கவை அணுகி ஆட்ட நிர்ணய சதியினை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
உள்ளூர் ஊழல் தடுப்பு அதிகாரிக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணையில், சேனநாயக்கா வாட்ஸ்அப் மூலம் வீரரைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 100 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் அறிமுகப்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத்தின் மூலம் ஆட்ட நிர்ணயம் தொடர்பான பல குற்றங்களை குற்றமாக்கிய தெற்காசியாவின் முதல் நாடாக இலங்கை ஆனது.
2014 டி:20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் சேனநாயக்காவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















