கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிற பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாக டெல் அவிவ் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று (10) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய கடற்படை அவர்கள் காசாவிற்கு பயணம் செய்வதைத் தடுத்ததை அடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை கடல் மார்க்கமாக காசாவை நெருங்கியபோது, இஸ்ரேலியப் படைகள் அவர்கள் பயணித்த படகில் ஏறி அதனை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
பின்னர், ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் துன்பெர்க் உட்பட 12 பேர் கொண்ட குழுவினரை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தனர்.
பிரிட்டிஷ் கொடியுடன் கூடிய படகு இஸ்ரேலிய துறைமுகமான ஆஷ்டோடுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் ஆர்வலர்கள் ஒரே இரவில் பென் குரியன் விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் சொந்த நாடுகளைச் சேர்ந்த தூதரக பிரதிநிதிகள் விமான நிலையத்தில் அவர்களைச் சந்தித்ததாகவும் அது மேலும் கூறியது.
அரிசி மற்றும் குழந்தை பால் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளின் ஒரு சிறிய பங்கை ஆர்வலர்கள் சுமந்து வந்தனர்.
மேலும் பல மாதங்களாகப் போரினால் பேரழிவிற்கு உள்ளான காசாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்து சர்வதேச விழிப்புணர்வை காசாவில் ஏற்படுத்தவும் அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
எவ்வெறினினும் படகு தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் தன்னை கடத்தியதாக துன்பெர்க் குற்றம் சாட்டினார்.
“என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க ஸ்வீடிஷ் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று இஸ்ரேலிய கடற்படை நடவடிக்கைக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில் அவர் கூறினார்.
கடத்தப்பட்டதாக துன்பெர்க்கின் கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்தார்.