அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் முக்கமாலா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 178 ஆண்டுகளில் இந்தியர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிகாகோவில், நேற்று நடந்த ‘அமெரிக்க மருத்துவ சங்கத்தின்’ (AMA) தலைவர் பதவியேற்பு விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் சமமான அமெரிக்க சுகாதார அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ‘‘ஸ்ரீனிவாஸ் முக்கமாலா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீனிவாஸ் முக்கமாலா “நான் ஒரு மருத்துவர். எனக்கு தரமான சிகிச்சை கிடைப்பது இயல்பானதுதான். ஆனால், சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கிறதா? என்பதுதான் கேள்வி. இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இன்சூரன்ஸ் தொகை மிகப்பெரியது. தவிர, மருந்துகளின் விலை மற்றும் மருத்துவ நிபுணர்களை சந்திக்க ஏற்படும் தாமதம் போன்றவை சாமானிய மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை சவாலானதாக மாற்றுகிறது.
நமது சுகாதார அமைப்புக்கு திறமையான மருத்துவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது மருத்துவத் துறையில் உள்ள தலைவர்கள் ஒருமித்த குரலில் பேச அமெரிக்க மருத்துவ சங்கம் (AMA) மிகவும் அவசியம்.
தலைவராக நான் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர், மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மிக முக்கியமான கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், ஆரோக்கியமான உணவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த கொள்கை. மருத்துவர்களாக நாம் இக்கொள்கையை சிறப்பான முறையில் செயல்படுத்துவோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

















