அகமதாபாத்தில் 265 நபர்களின் உயிரை காவு கொண்ட AI171 ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர், பேரழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தான் அதிசயமாக தப்பித்ததை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டவரான விஸ்வாஷ் குமார் ரமேஷ், விமானத்தின் இடது பக்கத்தில் அவசர கதவுக்கு அருகில் 11A இல் அமர்ந்திருந்தார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உடைந்து விழுந்ததாகவும், அவரது இருக்கை இடிபாடுகளிலிருந்து தப்பியதாகவும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, விமானத்தின் மற்ற பகுதிகளை சூழ்ந்த தீப்பிழம்புகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
“விமானம் உடைந்த போது என் இருக்கை கழன்று விட்டது, நான் காப்பாற்றப்பட்டேன்” என்று அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் கூறினார்.
ரமேஷ் மருத்துவர்களிடம், தான் விமானத்திலிருந்து குதிக்கவில்லை என்றும், விமானம் வெடித்து சிதறியபோது இருக்கையில் கட்டப்பட்டிருந்த நிலையில் தூக்கி எறியப்பட்டதாகவும் கூறினார்.
இது குறித்து மேலும் விவரித்த அவர்,
நான் தரையிறங்கிய இடம் தாழ்வாக இருந்தது.
நான் சீட் பெல்ட்டை கழற்றினேன்.
ஒரு கணம், என் உயிருக்கு பயந்தேன்.
ஆனால் நான் தரை மட்டத்திற்கு அருகில் இருந்தேன்.
அதனால் நான் வெளியேற முயற்சித்தேன்.
நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை,
நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.
என் கண் முன்னே மக்கள் இறந்தனர் – என்றார்.
தற்போது அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் அதிர்ச்சிப் பிரிவில் கண்காணிப்பில் உள்ளார்.