இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான தங்கள் இடத்தை உறுதி செய்யும் பாதையில் கனடா தோல்வியற்ற ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, நிக்கோலஸ் கிர்டன் தலைமையிலான அணி, அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை இந்திய துணைக் கண்டத்தில் நடைபெறும் உலகக் கிண்ணத்தில் தங்கள் இடத்தை உறுதி செய்யும் 13 ஆவது அணியாக மாறியது.
அமெரிக்காவின் பிராந்திய தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் ஒன்ராறியோவில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா தனது இடத்தை உறுதி செய்தது.
நான்கு அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கனடா தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றது.
இது கனடாவின் இரண்டாவது டி20 உலகக் கிண்ண போட்டியாகும்.
அவர்கள் 2024 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக தகுதி பெற்றிருந்தனர்.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பா தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்து இரண்டு அணிகளும், ஆப்பிரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்து இரண்டு அணிகளும், மற்றும் ஆசியா-EAP தகுதிச் சுற்றுப் போட்டியில் இருந்து மூன்று அணிகளும் அவர்களுடன் இணைவர்.