‘கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட பல விருந்து நிகழ்ச்சிகளில் இந்த போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து குறித்த விவகாரத்தில் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மேலும் பல நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவை விசாரிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இதனால் நடிகர் கிருஷ்ணாவுக்கு பொலிஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தற்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்படுள்ளது. கிருஷ்ணாவிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் கிருஷ்ணா ‘கழுகு, வானவராயன், வீரா, வன்மம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.