“காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 இலட்சம் பேர் மாயமாகியுள்ளனர்” என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காசா மீது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்போரினால் இதுவரை காசாவில் சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மையில் இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 3,77,000 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அத்துடன் போருக்கு முன்னர் காசாவில் 22 லட்சம் பேர் வசித்து வந்துள்ளனர் எனவும், தற்போது 19 லட்சம் பேர் மாத்திரமே அங்கு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் இப் போரின்போது மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் அல்லது காணாமற் போய் இருக்கலாம் என்றாலும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்” உலக நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் காஸா மக்களுக்கு உதவியை வழங்க முன்வந்தாலும், அதை பெற வரும் மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மே மாத இறுதியில் இருந்து இன்று வரை, மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது 450 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 3,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















