மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தி, பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த திருடன் அவரது வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று (25) பிற்பகல் 01.30 மணியளவில் குறித்த நபரை கைது செய்வதற்காக இரு பொலிசார் சிவில் உடையில் அங்கு சென்று கைது செய்ய முற்பட்டனர்.
இதன் போது அங்கு பொலிசார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரு பொலிசார் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை நடாத்திய திருடன் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர் .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.














