போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை பொலிஸார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் கூறிய தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டனர்.
இதன்போது நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரைக் கைது செய்ய பொலிஸார் கேரளாவுக்கு விரைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்பிறகு அவருக்கு அரசு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















