உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அலகானந்தா ஆற்றில் 20 பேருடன் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், எட்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவலின்படி, பேருந்து பத்ரிநாத் நோக்கி மலையேறிச் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஆற்றில் விழுந்தது.
விபத்தினை அடுத்து காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் வெளியே கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் பலர் பேருந்து ஆற்றில் விழுவதற்கு முன்பு அதில் இருந்து குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை, நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளின் உயர் அதிகாரிகள் மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.


















