இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம் என இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், கனடா தினத்தை முன்னிட்டு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலகம் முழுவதும் உள்ள கனேடியர்கள் ஒருமித்தாகக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நாளில், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் வாழும் அனைத்து கனேடிய பிரஜைகள் மற்றும் இந்த தினத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் கனடா தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார். கனடா தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வெளியிட்டுள்ள வாழ்த்துக் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கனடா தினம் என்பது நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்கும் முக்கியமான மதிப்புகளை பன்முகத்தன்மை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, மனித உரிமைகளுக்கான மரியாதை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்முடைய நீடித்த அர்ப்பணிப்பு பிரதிபலிக்கக் கூடிய சிறப்பான ஒரு வாய்ப்பாகும்.
இந்த தினம், நமது நாடு இன்று இருக்கும் நிலையில் அடித்தளமிட்டு, அதன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிய முன்னோடி தலைமுறைகளின் பங்களிப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் தருணமாகவும், கூட்டமைப்பிற்கு முந்தையதும் பிந்தையதுமான வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்வதற்கான வலிமையையும், ஞாபகப் பாக்கியத்தையும் கௌரவிக்கும் ஒரு சிறப்புநாளாகவும் அமைகிறது. கனடாவின் துடிப்பான உருவாக்கத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதிலிருந்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருவதும், அதே சமயம் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை தொடர்ந்து செழித்து வளரும் எங்கள் கூட்டுறவுகள் குறித்து நான் பெருமை அடைகிறேன்.
இலங்கையில் கனடாவின் இருப்பு, எங்களது நீடித்த மற்றும் உறுதியான வெளிநாட்டு கொள்கையின் ஒரு அடித்தளமாகவே உள்ளது. நாங்கள் அரசாங்கத்துடன் மட்டுமல்லாது, தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கட்டியெழுப்பும் நட்புறவுகளிலும் செயல்படுகிறோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் இந்தோ – பசிபிக் வர்த்தக பிரதிநிதி இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் விஜயம் செய்தமையில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த விஜயம், கனடாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் அதிலும் குறிப்பாக இலங்கையில் வேரூன்றியவர்களின் இந்த நாட்டில் முதலீடு செய்யவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும் காணப்படும் ஆழமான ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
2022 ஆம் ஆண்டில் கனடாவின் இந்தோ – பசிபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இந்த பிராந்தியத்தின் மக்களுடனான எங்களது உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பை ஆதரிப்பதில் எங்கள் பங்களிப்பை ஆழப்படுத்தவும், கனடா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கனடா தினத்தைக் கொண்டாடும் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் இது, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எட்டிய சாதனைகள் குறித்து சிந்திக்கவும், எதிர்காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும் என்பதை நினைவு கூரவும் உதவும் ஒரு அரிய தருணமாக அமைய வேண்டும் என கனேடிய உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


















