தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.
மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும்.
இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,
எனது பிரதிநிதிகள் இன்று (செவ்வாயன்று) காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலியர்களுடன் நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர்.
இதன்போது 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம்.
சமாதானத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்பந்தம் இல்லையென்றால் நிலமை மோசமடையும் என்றார்.
டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு, ஜனவரி 19 அன்று தொடங்கிய முந்தைய போர் நிறுத்தம் மார்ச் வரை நீடித்தது.
ஹமாஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியபோது விரோதப் போக்கு மீண்டும் தொடங்கியது.
அப்போதிருந்து, பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் உயர் மட்ட விவாதங்களுக்காக வொஷிங்டனில் உள்ளார்.
அவரது நிகழ்ச்சி நிரலில் காஸா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் அடங்கும்.
டெர்மர், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் எல்லை தாண்டிய ஒரு கொடிய தாக்குதலை நடத்தியபோது போர் வெடித்தது.
அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
அப்போதிருந்து, இஸ்ரேலின் இராணுவ பதில் காசாவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.