ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 37 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும், 110 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், காணமற் போனவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும், அம் மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனமழை காரணமாக மண்டி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக துனாக் மற்றும் பக்சயெட் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடுகள், மின் இணைப்புகள், குடிநீர் குழாய்கள் ,வீதிகள், வாகனங்கள் போன்றனவும், பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அரசு நடத்திய கணக்கீட்டின்படி, மொத்த சேத மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.700 கோடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாயை தற்காலிக உதவித் தொகையாக வழங்கி வருவதோடு, உணவு, மருத்துவம் மற்றும் தற்காலிக குடியிருப்பு வசதிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஜூலை 7 ஆம் திகதி வரை கன மழை நீடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அம் மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ‘ கன மழை காரணமாக மக்களது அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக அரசு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.