கடந்த ஜூன் 30 ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தக் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் ஒன்றும், கார் ஒன்றும் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய கூட்டு தோடலில் இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனத்துக்கு மீண்டும் வர்ணம் பூசி அதன் அடையாளம் மாற்றப்பட்டதாகவும், ஏனைய வாகனங்கள் போலியான வாகன உரிமத் தகடுகளுடன் காணப்பட்டதாகவும், அவை ஹோமகமவில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்களில் ஒருவரிடம் 197 கிராம் ஹெராயின் மற்றும் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
இந்தக் கொலை துபாயில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான பின்னணி
கடந்த ஜூன் 30 ஆம் திகதி கஹவத்தை, யாயின்னாவின் கோஸ்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத 4 நபர்கள் வந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இருவரும் ஒரு ஜீப்பில் கோஸ்கெல்லாவில் ஒரு தொலைதூர இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 22 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது 27 வயதுடைய நண்பர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















