நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இப் பிரச்சினைக்கு உடனடியாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உரிய அதிகாரிக்ளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் விடயத்துடன் தொடர்புயை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். ” இதில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யானை தாக்குதல்களின் எண்ணிக்கையும், கிராமிய மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளும் விரிவாக ஆராயப்பட்டன.
இதன்போது மனிதவள பற்றாக்குறையை நிரப்பும் நோக்கில், சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து 5,000 பேர் உதவியாளர்களாக இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் செயல்திறன் வாய்ந்ததாக இருக்க, தற்போது குறைவாக உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதற்காக கெப் வகை வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
கிராமங்களுக்கு யானைகள் நுழைவதை தடுக்கும் நோக்கில், 800 கி.மீ. மின்சார பாதுகாப்பு வேலி அமைப்பதற்கும், 16 யானை வழித்தடங்களை மீளமைக்கும் திட்டங்களை விரைவாக தயாரித்து சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறு, அரசியல் நிர்வாகமும், மக்களின் பங்களிப்பும் இணைந்து, காட்டு யானைகள் தொடர்பான பிரச்சினைக்கு தகுந்த தீர்வுகளை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், காட்டு யானைகளின் பாதுகாப்பும், கிராம மக்களின் நலனும் ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.















