உத்தர பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர்.
ஆலய வளாகத்தில் மின் கம்பி ஒன்று தகரக் கொட்டகையில் அறுந்து விழுந்ததில் பலருக்கு மின்சாரம் தாக்கியது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியதுடன், கூட்ட நெரிசலுக்கு வழி வகுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, திங்கட்கிழமை (28) அதிகாலை 3 மணியளவில் ஹைதர்கரில் உள்ள ஆலயத்தில் ஜல அபிஷேகத்துக்காக ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
மாவட்ட நீதிபதியின் கூற்றுப்படி, சில குரங்குகள் மேலே செல்லும் மின்சார கம்பியில் குதித்தன, இதன் காரணமாக கம்பி உடைந்து ஆலய வளாகத்தின் கொட்டகையில் விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது, மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்.
பக்தர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 29 பேர் காயமடைந்து ஹைதர்கர் மற்றும் திரிவேதிகஞ்ச் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பலத்த காயமடைந்தவர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



















