டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 12-ஆம் திகதி, குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ‘ஏர் இந்தியா போயிங் 787-8’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் அதன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ‘ரன்’ நிலைமையில் இருந்து தானாகவே ‘கட் ஆப்’ நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த DGCA, வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் முக்கியமாக:
-
போயிங் 787 மற்றும் 777 வகை விமானங்களை இயக்கும் விமானிகள் போதுமான பயிற்சி இல்லாமல் செயல்பட்டு வருவது,
-
போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்கள் இயக்கப்படுவது,
-
சவாலான விமான நிலையங்களை அணுகும்போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதது,
என்பவை குறிப்பிடத்தக்கவை.
மேலும், அவசரகால உபகரணங்கள் சரிபார்க்கப்படாமலும், இயந்திரப் பாகங்கள் நேரத்தில் மாற்றப்படாமலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிழைகள் உள்ளதாகவும் ஏற்கனவே ஏர் இந்தியாவுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிலளிக்கப்படுமென என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














