ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிற்பகல் 1.10 மணியளவில் மீகொடவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான ஹோமாகமை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்திருந்தார்.
அவர் தனது அரசியல் வாழ்க்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் பிற கட்சிகள் உட்பட பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பொலிஸார் விரைவாகச் செயல்பட்டு, சாலைத் தடைகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, தலங்கம பகுதியில் ஒரு வாகனத்தையும் அதன் சாரதியையும் அவர்கள் கைது செய்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 9 மிமீ துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















