ஐக்கிய அமெரிக்கா… உலகமே வியந்து பார்க்கும் ஒரு உன்னத தேசம்… மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் அறிவியல் முன்னேற்றத்திலும் இந்த நாடு அடைந்த உயரத்தில் 10 சதவீதத்தையேனும் நாம் அடைந்து விட மாட்டோமா என இலக்குகளை நிர்ணயித்து உலகின் பல்வேறு நாடுகளும் உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களை வகுத்து வருகின்றன..
செல்வந்தர்களின் சூதாட்ட விளையாட்டுத்திடல் ஆன லாஸ் வேகஸ், உலகின் இலத்திரனியல் சந்தையின் மையம் சிலிக்கான் வேலி, உல்லாச பயணிகளின் சொர்க்கபுரி ஹவாய், ஓங்கி வளர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள் வான் உயரத்தை அளவு பார்க்கும் அழகைக் கொண்ட நியூயார்க் நகரம், மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் இயக்க சக்தியாக பிரதான முடிவுகளை மேற்கொள்ளும் கேந்திர ஸ்தானமாக விளங்கும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரம் வாசிங்டன் டி சி.. என மேலும் பல நகரங்களைப் பற்றியும ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய இடங்களாக குறிப்பிடலாம்..
இவ்வளவிற்கும் இந்த நாட்டின் வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே ஆரம்பிக்கிறது.. ஸ்பானிய கடலோடி கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு அமெரிக்காவை வந்தடைந்தார் அப்பொழுது அங்கு வசித்து வந்தவர்கள் அமெரிக்க பழங்குடியினரான சிவப்பிந்தியர்கள் ஆவர்….
ஐரோப்பியர்களின் இந்த வருகை ஆரம்பத்தில் நல்ல விதமாக தோன்றினாலும் நாட்கள் செல்ல செல்ல சிவப்பு இந்தியர்கள் எதிர்பார்த்திராத சம்பவங்கள் நடந்தேற தொடங்கின.. பூர்வக்குடி சிவப்பிந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க தொடங்கியது வெள்ளைக்கார கூட்டம்.. பலம் குறைந்த சிவப்பு இந்தியர்கள் வெள்ளையர்கள் முன்னால் மண்டியிட்டனர் வயதானவர்களும், குடும்ப தலைவர்களும் கொல்லப்பட்டனர் குழந்தைகள் மற்றும் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஆங்கில வழி மிஷினரி கல்விமுறையில் கல்வி கற்க வைக்கப்பட்டனர் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரியம் அழிந்து உடல் நிறத்தில் மட்டுமே அந்த மக்கள் தங்களை சிவப்பிந்தியர்கள் ஆக உணரத் தொடங்கினர்…
வந்தேறிகளின் நிலமாக ஐக்கிய அமெரிக்கா விளங்கினாலும் அந்த நாட்டு மக்களின் அறிவுத்திறன் மற்றும் அமெரிக்க நிலத்தின் மீதான அவர்களது பற்று இன்று நாம் காணும் வளர்ச்சியடைந்த அமெரிக்காவை கட்டியெழுப்புவதற்கு அடித்தளமாக அமைந்தது அடித்தளமாக அமைந்தது..
ஐக்கிய ராஜ்ஜியத்தை போல நாடுகளை வலை போட்டு பிடித்து காலனித்துவ ஆட்சி நடத்தாமல் ஐக்கிய அமெரிக்கா சற்றே வித்தியாசமாக தன்னை சுற்றி காணப்படும் சிறிய சிறிய நிலப்பகுதிகளை விலை கொடுத்து வாங்கி தனது நிலப்பரப்பை விஸ்தீரணம் செய்தது..
வல்லரசு பதவிக்கான போட்டியில் ரஷ்யா ஐக்கிய ராஜ்யம் ஜப்பான் சீனா என்பன போட்டி போடும்போது நில அளவில் தானும் அவர்களுக்கு சமமாக விளங்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த நில பரப்பு அதிகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்…
முதலாம் இரண்டாம் உலகப்போர்களில் சற்று ஒதுங்கியே நின்று கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்கா பர்ல் ஹார்பர் மீதான தாக்குதலுடன் இரண்டாம் உலகப் போரில் உக்கிரமாக போரிட தொடங்கியது… ஜப்பானை தனது வழிக்கு கொண்டு வரும் இறுதி அஸ்திரமாக அணுகுண்டை வீசி இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது…
இரண்டாம் உலகப்போரில் இறுதியாக வானிலிருந்து விழுந்த 2 குண்டுகளான லிட்டில் பாய் மற்றும் ஃபேட்மேன் புளூட்டோனியம் அணுகுண்டுகள் விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் வெடித்து லட்சக்கணக்கான மக்களை ஒரு நொடியில் கொன்று குவித்தது…
அன்று ஹிரோஷிமா நாகசாகியில் கேட்ட அணுகுண்டின் மாபெரும் வெடிச்சத்தம் , அதனூடாக உலக மக்களுக்கு புதியதொரு செய்தியை அறிவித்தது..
அதுவரை உலகத்தின் ஆதிக்க சக்தியாக பார்க்கப்பட்டு வந்த ஐக்கிய ராஜ்யம் அதாவது பிரித்தானியாவின் ஆதிக்கத்தை அணுவாயுதம் எனும் ஒரே ஒரு பிரம்மாஸ்திரத்தை கொண்டு ஐக்கிய அமெரிக்கா மாற்றி அமைத்தது.இந்த சம்பவம்தான், உலகப் போலீஸ்காரன் எனும் அந்தஸ்தையும் ஐக்கிய அமெரிக்காவின் பெயருக்குப் பின்னே சேர்த்தது….
இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திச் சென்ற மனிதப் பேரவலங்கள் உயிர் கொலைகள் சேதமடைந்த சொத்துக்கள் இடிந்த வீடுகள் உருக்குலைந்த தொழிற்சாலைகள் ஆகியவை வரலாற்றின் சோக நினைவுகளாக என்றும் நினைவில் கொள்ளப்படுகிறது… அத்துடன் இரண்டாம் உலகப்போர் உலக நாடுகளில் ஏற்படுத்தியிருந்த பொருளாதார தாக்கம் மீண்டும் ஒரு முறை உலகம் இப்படியான ஒரு போரை சந்திக்கக் கூடாது என்ற கோஷத்தை உலக அரங்கில் ஏற்படுத்தியிருந்தது…
இதன் பின்னணியில் உலகின் சமாதானத் தூதுவனாக தேவைப்பட்டால் தடாலடி போலீஸ்காரனாக தன்னை அறிவித்துக் கொள்ளும் அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்காவின் அதிகார பீடம் பெற்றுக்கொண்டது..
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதி ஆயுத ரீதியான மோதல்கள் சற்றுக் குறைவாக காணப்பட்டாலும் திரைமறைவில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டி தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருந்தது.. அந்த காலப்பகுதியில் மிகவும் பெரிய நாடாக விளங்கிய சோவியத் யூனியனுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் அதிகாரப் போட்டி உருவாகி அது பனிப்போர் ஆக பரிணமித்தது..
இந்தப் பனிப்போர் 1945 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை நீடித்தது..
இதன் பின்னணியிலேயே சோவியத் யூனியனுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் விண்வெளிப் போட்டி உருவாகியது.. சோவியத் யூனியன் முதலாவது செயற்கைக்கோளான ஸ்புட்னிக் ஒன் செய்மதியை விண்வெளிக்கு அனுப்பியது பின்னர் லைக்கா எனும் நாயை விண்வெளிக்கு அனுப்பியது இதற்கு போட்டியாக அமெரிக்கா குரங்குகளை விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை செய்தது உடனடியாக சோவியத் பெரும் பாய்ச்சலாக யூரி ககாரின் ஐ முதலாவது விண்வெளி மனிதராக அறிவித்து வான்வெளி க்கு அனுப்பி வைத்தது விண்வெளிப் போட்டியின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற அழுத்தத்தில் ஒரு படி மேலே போய் ஐக்கிய அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைத்தது..
அதேபோல உலகத்தில் அனைத்து நாடுகளும் ஐக்கிய அமெரிக்கா அல்லது சோவியத் ரஷ்யா என்ற சார்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு இரண்டு அணிகளாக பிரிந்து நின்றன ஐக்கிய அமெரிக்காவை சார்ந்து நிற்கும் நாடுகளுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நிதி உதவி பொருளாதார தொழில்நுட்ப உதவிகள் கிடைத்தன அதை போல சோவியத் பக்கம் நின்ற நாடுகளுக்கு சோவியத் உதவி செய்தது..
இதனிடையே இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் சாராமல் தனியே நின்ற நாடுகள் அணிசேரா நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கி பொதுவான நிலைப்பாட்டை எடுத்தன.. அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பிரதான பாத்திரத்தை நமது அண்டை நாடான இந்தியா ஏற்றுக் கொண்டது.. இன்று சர்வதேச அரங்கில் இந்திய அரசியல் பேசுபொருளாக மாறியதன் முதலாவது படியாக அணிசேரா நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்ட சம்பவத்தை குறிப்பிடலாம்…
இப்படியாக முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் மற்றும் சோவியத் உடனான பனிப்போர் என்பவற்றைக் கடந்து ஐக்கிய அமெரிக்கா மெல்ல மெல்ல உலகத்தின் ஏகபோக பாதுகாவலனாக மாறத் தொடங்கியது..
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் பிளவுடன் ஐக்கிய அமெரிக்காவிற்கு இருந்த ஒரே ஒரு பிரதான எதிரி நாடும் தனது நடவடிக்கைகளை மௌனித்து கொண்டது..
அதன் பின்னர் உலகெங்கிலும் நாடுகளில் ஏற்படும் அரசியல் ரீதியான மாற்றங்கள் நிர்வாக ஒழுங்கமைப்புக்கள் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் போன்ற பிரதான அரசியல் சூழ்நிலைகளில் ஐக்கிய அமெரிக்கா முன்னின்று மத்தியஸ்தம் செய்தது.. ஒரு சில நாடுகளில் யார் ஜனாதிபதியாக வரவேண்டும், புதிய ஜனாதிபதியை கொண்டுவருவதற்கு எப்படியான அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து திட்டங்களையும் ஐக்கிய அமெரிக்காவே தீட்டியது..
தமக்கு சார்பான அரசாங்கம் ஒரு நாட்டின் ஆட்சிக்கட்டிலில் அமர்வது ,அமெரிக்க தேசத்தை தாண்டிய பன்னாட்டு அரசியல் நலன்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற கொள்கை அடிப்படையில் உலகெங்கிலும் தனக்கான நட்பு நாடுகளை உருவாக்கிக்கொள்ள ஐக்கிய அமெரிக்கா திரைமறைவில் உழைத்தது..
தொண்ணூறுகளுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்காவை உலகத்தின் ஏனைய 200 சொச்சம் நாடுகளும் ஒரு சொர்க்கபுரியாக பார்த்தனர்.. கல்வி வசதி பொருளாதார முன்னேற்றம் வாழ்க்கைத்தரம் மக்கள் பாதுகாப்பு அதி உயர் மருத்துவ வசதிகள் என சாதாரண மனிதன் காணும் ஒரு கனவு வாழ்க்கை சாதாரணமாகவே அமெரிக்க கலாச்சாரத்தில் நிலவி வந்தது..
ஆங்கிலத்தில் அமெரிக்கன் ட்ரீம் என்னும் சொல்லாடல் கூட காணப்படுகிறது அமெரிக்காவை மாய தேசமாகவும், வாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கும் சந்தையாகவும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது
அவ்வப்போது அங்கும் இங்கும் இடம்பெற்ற ஒருசில துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கத்திக்குத்து நிகழ்வுகள் தவிர குறிப்பிட்ட சொல்லும்படியான மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்களோ , அல்லது ராணுவப் படையெடுப்புகளோ அந்த நாட்டின் மீது மேற்கொண்டிருக்கபடவில்லை…..
இவ்வளவு ஏன் முதலாம் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கூட ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப் பகுதி மீது அச்சு நாட்டுப் படைகள் ஒரு துப்பாக்கி குண்டை கூட வீசி எறிந்திருக்க முடியவில்லை.. அமெரிக்காவின் ஆளுகைக்குட்பட்ட பசுபிக் பிராந்தியத்தில் காணப்பட்ட ஹவாய் தீவு மீது மட்டுமே ஜப்பான் தாக்குதல் நடத்தியிருந்தது..
நாம் கூறிய சமாதானம் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி வாழ்க்கைத்தரம் என அனைத்து விடயங்களும் 2001ஆம் ஆண்டு வரை எந்தவித சந்தேகமும் இன்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தில் நிலவி வந்தது இது மறுக்க முடியாத உண்மை..
ஆனால்..
2001ஆம் ஆண்டில் ஒரு நாள் அமெரிக்க வரலாற்றின் கரி நாளாக மாறிப் போனது..
வல்லரசு நாடுகளே சீண்டிப் பார்க்க தயங்கும் அமெரிக்கப் ஏகாதிபத்தியத்தின் ஆணிவேரை ஆசியாவின் மலைப்பகுதிகளில் ஒளிந்து கொண்ட ஒரு கூட்டம் அசைத்துப் பார்த்தது.. அந்தக் கூட்டம் தான் எதிர்பார்த்ததை விட அதிக சேதத்தை அந்த நாளில் அமெரிக்க தேசத்தில் ஏற்படுத்தியிருந்தது…
2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் திகதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர்.
இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
இரு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தை தாக்கின
மூன்றாவது விமானம் பென்டகனின் மேற்கு பகுதியை தாக்கியது. பென்டகன் என்பது அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட தலைமையகம். இது நாட்டின் தலைநகரமான வாஷிங்டன் டி.சியில் உள்ளது.
நான்காவது விமானம் பென்னில்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் நொறுங்கி விழுந்தது. ஆனால் இந்த விமான நாடாளுமன்ற கட்டடமான கேபிட்டலின் மீது மோத திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பயணிகள் சண்டையிட்டதால் அது வயல்வெளியில் மோதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எத்தனை பேர் உயிரிழந்தனர்?
- மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள். இதில் விமானத்தை கடத்தியவர்கள் 19 பேர் சேர்க்கப்படவில்லை.
- விமானங்களில் இருந்த 246 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர்.
- இரட்டை கோபுரத்தில் 2606 பேர் உயிரிழந்தனர்.
- பென்டகனில் மொத்தம் 125 பேர் கொல்லப்பட்டனர்.
9/11 தாக்குதலுக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள விமானங்களின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பை கவனிக்க இதற்கென தனி போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுர இடிபாடுகளை சுத்தப்படுத்த கிட்டதட்ட எட்டு மணிநேரம் ஆனது.
அங்கு ஒரு நினைவிடமும், அருங்காட்சியகமும் உள்ளது. கட்டடம் மீண்டும் வேறு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.



















