பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்
நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமை நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்
இதன்போது சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்ததுடன் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
மேலும் இதன்போது நாடாளுமன்றில் குழப்பநிலை ஏற்பட்டதையடுத்து சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ண நாடாளுமன்ற அமர்வினை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். 10 நிமிடங்களின் பின்னர் சபை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இதன்போது மீண்டும் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்
இதனையடுத்து நாடாளுமன்றில் மீண்டும் குழப்பநிலை ஏற்பட்டது. சபையில் ஆளுந்தரப்பினர் எதிர்த்தரப்பு உறுப்பினர்களை கிண்டலாக பேசியதாகவும் அவர்கள் அதனை மீளப்பெற வேண்டும் என எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சபாநாயகர் மீண்டும் நாடாளுமன்றத்தினை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















