அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர்.
AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella).
அல்பேனியாவில் அதிகம் ஊழல் நடப்பதாக வந்த புகாரையடுத்து, ஊழலை தடுக்க அல்பேனியா பிரதமர் எடி ராமா (Edi Rama) செயல்படுத்தியிருக்கும் புதிய யோசனைதான் இந்த AI அமைச்சர்.
அமைச்சர் என்றால் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும். அதனால் அரசு திட்டங்களை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்தும் பொது கொள்முதல் (Public Procurement) துறையை டியல்லாவிடம் ஒதுக்கியுள்ளனர்.
இதேவேளை, அல்பேனிய அரசின் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்து அந்த துறை 100 சதவிகிதம் ஊழல் இல்லாமல் செயல்பட AI அமைச்சர் டியல்லா உதவி செய்வார் என பிரதமர் கூறியிருக்கிறார்.
ஆனால் இதில் எந்த அளவுக்கு மனித மேற்பார்வை இருக்கும் என பிரதமர் இன்னும் கூறவில்லை.
டியல்லாவை அல்பேனிய அரசு பயன்படுத்துவது இது முதன்முறை அல்ல.
இதற்கு முன்பே அல்பேனியாவின் டிஜிட்டல் சேவை தளங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை விண்ணப்பிப்பதற்கு மெய்நிகர் உதவியாளராக டியல்லா உதவி செய்திருக்கிறது என அல்பேனிய பிரதமர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த AI அமைச்சர் யோசனை சட்டத்துக்கு எதிரானது எனவும் முட்டாள்தனமானது எனவும் அல்பேனியாவில் எதிர்கட்சியினர் கூறியுள்ளதுடன் AI அமைச்சர் குறித்து பல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதை அல்பேனிய அரசு அதிகாரபூர்வமாக நியமிக்கவில்லை. இது ஒரு அடையாள நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.



















