பதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான விசாரணை அறிக்கை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சுற்றுலா சென்ற குறித்த பேருந்து, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல- வெல்லவாய வீதியில் 24ஆவது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவின் அறிக்கையின்படி, விபத்துக்குள்ளான பேருந்து முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக் அமைப்பில் குறைபாடுகள் இருந்தமையும் தெரியவந்துள்ளது.
அத்துடன், வீதி குறித்து உரிய புரிதல் இன்றியே, பேருந்தின் சாரதி செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















