2025 ஆசியக் கிண்ணத்தின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில், சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியை இன்று (23) எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று இரவு 08.00 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இரு அணிகளும் தங்கள் முதல் சூப்பர் 4 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் அழுத்தத்தில் உள்ளன.
பாகிஸ்தான் இந்தியாவிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் இலங்கை பங்களாதேஷிடம் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் மற்றொரு தோல்வியானது இரு தரப்பினரின் 2025 ஆசியக் கிண்ண நம்பிக்கையை முடிவுக்கு கொண்டு வரக்கூடும்.
பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய சூப்பர் 4 போட்டி இரு அணிகளுக்கும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியாகும்.
தோல்வியடையும் அணி இறுதிப் போட்டிக்கு வர வாய்ப்பில்லை.
இந்தியாவிடம் இரண்டு தோல்விகள் உட்பட அண்மைய தோல்விகளுக்குப் பின்னர், மீண்டு எழ பாகிஸ்தானுக்கு ஒரு வெற்றி தேவை.
அதே நேரத்தில் இலங்கையும் பங்களாதேஷிடம் தோல்வியடைந்த பின்னர் அழுத்தத்தில் உள்ளது.
இன்றிரவு ஒரு வெற்றி ஒரு அணியின் வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
ஆனால் ஒரு தோல்வி அவர்களை தொடரிலிருந்து வெளியேற்றும்.
இதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் தீர்க்கமானதாக இருக்கும்.
இரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 அரங்கில் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் பாகிஸ்தான் 13 போட்டிகளிலும், இலங்கை 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆசிய கோப்பை டி20 போட்டிகளில், பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக முன்னிலை வகிக்கிறது.
ஷேக் சயீத் மைதானம் இதுவரை ஏழு 2025 ஆசிய கோப்பை போட்டிகளை நடத்தியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் சராசரி ஓட்ட எண்ணிக்கை சுமார் 165 ஆகும்.
முதலில் துடுப்பாட்டம் செய்த அணிகள் ஏழு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளன.














