துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2025 ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடக்க துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மாவின் அபாரமான 75 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
அதே நேரத்தில் குல்தீப் யாதவின் மூன்று விக்கெட்டுகள் லிட்டன் தாஸ் தலைமையிலான அணியின் சேஸிங் முயற்சியை தோற்கடித்தது.
இந்தியா நிர்ணயித்த 169 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய பங்களாதேஷ் 19.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்த போட்டியின் முடிவானது சூப்பர் 4 சுற்றில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணியின் 2025 ஆசியக் கிண்ணத்துக்கான கனவினை நிறைவுக்கு கொண்டு வந்தது.
இன்று (25) நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இறுதிப் போட்டிக்கான நாக் அவுட் போட்டியாக இருக்கும்.
நேற்றைய போட்டியில் குல்தீப் (3/18), அக்சர் படேல் (1/37) மற்றும் வருண் சக்கரவதி (2/29) ஆகியோர் பந்து வீச்சில் இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பினை வழங்கினர்.
அதேநேரம், பங்களாதேஷ் அணிக்காக, சைஃப் ஹாசன் 51 பந்துகளில் 69 ஓட்டங்களை எடுத்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்காக, தொடக்க வீரர் அபிஷேக் 37 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்தார்.
அபிஷேக், ஷுப்மான் கில் (29) உடன் இணைந்து 6.2 ஓவர்களில் 77 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார்.
ஆனால், கில் மற்றும் அபிஷேக் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர், இந்திய நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் வேகத்தைத் தக்கவைக்கத் தவறினர்.
ஏனைய வீரர்கள் பெரிய ஓட்டங்களை பெறத் தவறியதால், இந்தியா ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.




















