மடகஸ்காரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த பாரிய போராட்டம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தன் அரசை கலைப்பதாக அறிவித்துள்ளார்.
ஆப்ரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு நாடான மடகஸ்கார், ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இங்கு, கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்களால் முன்னாள் ஜனாதிபதி மார்க் ரவலோமனானா பதவி விலகி, ‘யங் மலகாசீஸ் டீட்டர்மைன்ட்’ கட்சி தலைவரான ஆண்ட்ரி ரஜோலினா ஆட்சிக்கு வந்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் மடகாஸ்கரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, பல ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக, ‘ஜென் இசட்’ எனப்படும் இளம் தலைமுறையினர், ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் முதலில் தலைநகர் அன்டனனரிவோவில் தொடங்கின. பின்னர் நாடு முழுதும் பரவியது. பல்பொருள் அங்காடிகள், வங்கிகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனால் மாலை முதல் அதிகாலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இப் போராட்டங்களின்போது, 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஐ.நா., தெரிவித்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா தன் அரசின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்சியை கலைப்பதாக அறிவித்துள்ளார்.
”அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒழுங்காக செய்யவில்லை. நாங்கள் அதை ஒப்புக்கொள்கிறோம்,” என்றும் நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.



















