பாலஸ்தீனப் பிரதேசத்தில் ஹமாஸ் போராளிக்குழு போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (28) காசாவில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்களைத் தொடங்கின.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒரு பலவீனமான ஒப்பந்தத்துக்கான அண்மைய சோதனை இதுவாகும்.
இந்த தாக்குதலின் விளைவாக மத்திய காசா பகுதியில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் ஒரு வீடு தாக்கப்பட்டதில் ஐந்து பேர், காசா நகரத்தின் சப்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் நான்கு பேர் மற்றும் கான் யூனிஸில் ஒரு காரில் ஐந்து பேர் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய விமானங்களின் தாக்குதல்கள் காசா பகுதியில் புதன்கிழமை அதிகாலை வரை தொடர்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
மூன்று வார கால போர் நிறுத்தத்தில் அண்மைய வன்முறையாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இருந்த போதும், ஹமாஸின் போர் நிறுத்த மீறலின் பின்னணியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் உடனடியாக “சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வன்முறை நிகழ்ந்தது.
இந்த தாக்குதல்களுக்கான குறிப்பிட்ட காரணத்தை டெல் அவிவ் குறிப்பிடவில்லை, ஆனால் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர், இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பகுதியில் தமது படைகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறியதாகக் கூறினார்.
“இது போர் நிறுத்தத்தின் மற்றொரு அப்பட்டமான மீறலாகும்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஒக்டோபர் 10 அன்று நடைமுறைக்கு வந்தது.
2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான கொடிய ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் தூண்டப்பட்ட இரண்டு ஆண்டுகால போரை இது நிறுத்தியது.
எனினும் இரு தரப்பினரும் போர் நிறுத்த மீறல்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.















