பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய உயர் மாவோயிஸ்ட் தளபதியான மத்வி ஹித்மா (Madvi Hidma), இன்று (18) ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாதுகாப்பு படையினருடான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஆறு மாவோயிஸ்டுகளில் அவரும் ஒருவர்.
43 வயதான ஹித்மா, 2010 தண்டேவாடா தாக்குதல் மற்றும் 2013 ஜிராம் பள்ளத்தாக்கு படுகொலை உள்ளிட்ட முக்கிய தாக்குதல்களில் தொடர்புடையவர்.
அவர் நீண்ட காலமாக பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பில் இருந்தார்.
இந்த நிலையில், இன்று ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த என்கவுண்டரின் போது, ஹித்மாவின் இரண்டாவது மனைவியும் அவருடன் சேர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆந்திரப் பிரதேசம்-சத்தீஸ்கர்-ஒடிசா எல்லைக்கு அருகே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து பாதுகாப்புப் படையினருக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கப்பட்டது.
















