பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (20) இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
அதன்படி இந்தப் போட்டியானது, இன்று (20) மாலை 6.00 மணிக்கு ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.
ஒருநாள் தொடரில் பாகிஸ்தானிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இலங்கை அணி, சிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டியை வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும்.
2025 ஆசியக் கிண்ணப் பயணத்தை ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கை அணி முடித்தது.
தங்கள் குழுவில் முதலிடத்தில் இருந்தபோதிலும் சூப்பர் 4 கட்டத்தில் வெளியேறியது.
இன்றையப் போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அவர்கள் முயற்சிப்பார்கள்.
ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக இரண்டு முக்கிய வீரர்களான சரித் அசலங்க மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோரின் சேவையை அவர்கள் இழந்துள்ளனர்.
இந்த நிலையில், தசூன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, சிம்பாப்வேயை எதிர்கொள்ளும்.
அதேநேரம் சிம்பாப்வே அணி, முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 05 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.
சர்வதேச டி:20 அரங்கில் இரு அணிகளும் இதுவரை ஒன்பது போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் இலங்கை 07 போட்டிகளிலும், சிம்பாப்வே 02 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















