தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்ட கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரமக முன்னிலையில் இன்று ஆஜர்படுதப்பட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை வைத்து, இச்சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கமைய, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோருவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும், போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் GPS கருவியை நில அளவைத் திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கையொன்றைக் கோருவதற்கு அனுமதி வழங்குமாறும், போதைப்பொருளுடன் காணப்பட்ட 2 துப்பாக்கிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கையொன்றைக் கோருவதற்கு அனுமதி வழங்குமாறும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.















