நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
இதனால், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (28) வெளியிட்ட நதி நீர் மட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல அதிகாரப்பூர்வ கண்காணிப்பு நிலையங்களில் நீர் மட்டங்கள் இப்போது சிறிய வெள்ள நிலைகளிலிருந்து பெரிய வெள்ள நிலைகளாக உயர்ந்துள்ளன என்பது காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, களனி ஆறு, மாணிக்க கங்கை, மகாவலி ஆறு, மல்வத்து ஓயா, தெதுரு ஓயா மற்றும் மகா ஓயா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நில்வல கங்கை, கிரிந்தி ஓயா, யான் ஓயா மற்றும் மா ஓயா ஆகிய நீர் படுகைகளை அண்மித்த பகுதிகளிலும் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
களனி ஆற்றுப் படுகையின் பல இடங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், களனி பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் இப்போதிலிருந்தும் அடுத்த 24 மணி நேரத்திற்கும் – அண்மைய வரலாற்றில் இல்லாத அளவுக்கு – அதிக ஆபத்துள்ள வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது.














