மாவீரர் நாளுக்குக் கட்டப்பட்ட கொடிகளும் பந்தல்களும் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் தமிழ் மக்களை சூழ்ந்தது. இம்முறை மாவீரர் நாள் பரவலாகவும் செறிவாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டது. தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் அது பெரிய அளவில் அனுஷ்டிக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் இல்லாத 17 ஆவது மாவீரர் நாள் இது. மழை, வெள்ளம், புயல் எச்சரிக்கை எல்லாவற்றையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு துயிலும் இல்லங்களிலும் திரண்டார்கள்.சில துயிலும் இல்லங்களில் தாங்கள் நனைந்து கொண்டு சுடருக்குக் குடை பிடித்து சுடரைக் காப்பாற்றினார்கள்.வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் தமது தலைக் கவசங்களை சுடர்களின் மீது பிடித்து அவை நூர்வதைத் தடுத்தார்கள் என்று ஒருவர் முகநூலில் எழுதியிருந்தார்.
இம்முறை அரசாங்கம் மாவீரர் நாள் ஏற்பாடுகளைத் தடுக்கவில்லை. ஆனால் இயற்கை இடையூறுகளை ஏற்படுத்தியது.மாவீரர் நாள் முடிந்த கையோடு மழை பெருத்தது;புயல் சூழ்ந்தது. ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத போதிலும் எல்லா நிரந்தர துயிலும் இல்லங்களிலும், தற்காலிக துயிலும் இல்லங்களிலும், நினைவகங்களிலும்ஒரே ஒழுங்கு முறைப்படி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது.ஒரு மையத்தில் இருந்து ஒழுங்கு செய்யப்படாத போதிலும் அது அவ்வாறு இயல்பாக,வழமையான ஒரு சடங்கைப் போல, தமிழ் மக்களின் பண்பாட்டுத் திருவிழாக்களைப் போல, விரத நாட்களைப் போல இயல்பாக எந்த ஒர் ஒழுங்கும் கெடாமல், சீராக அனுஷ்டிக்கப்பட்டமை என்பது அந்த நாள் எந்தளவுக்கு மக்கள் மயப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
எனினும், ஆயுதப் போராட்டம் இல்லாத 17 ஆவது மாவீரர் நாளின் மீதான கவனக் குவிப்பை இயற்கை திசை மாற்றியது. மாவீரர் நாளுக்காக கட்டப்பட்ட கொடிகளும் தற்காலிக நுழைவாயில்களும் அகற்றப்படுவதற்கு முன்னரே மழை பெருத்தது;புயல் சூழ்ந்தது.மாவீரர் நாள் அலங்காரத்துக்காக கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகள் நனைந்து தொங்கிய தெருக்களின் வழியே வெள்ளம் குறுக்கறுத்துப் பாய்ந்தது. எல்லாருடைய கவனமும் புயலின் மீது குவிந்தது.
அனுர அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது ஒரு சோதனை. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை நிமிர்த்த முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்து வரும் ஒரு காலகட்டத்தில் புயல் நாட்டைப் புரட்டிப் போட்டது. சுனாமி அளவுக்கு அது பெரிய அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கிட்டத்தட்ட 14 மாதங்களைக் கடந்திருக்கும் என்பிபி அரசாங்கத்துக்கு அது ஒரு சோதனைதான்.
டித்வா புயல் அனுர அரசாங்கத்திற்கு மட்டும் சோதனை அல்ல, மண்சரிவு ஆற்று வெள்ளம் போன்ற ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கும் சோதனைதான்.டயலக் தொலைத்தொடர்புச் சேவைக்கும் அது சோதனைதான். குளங்கள் வான் பாயும் வழிகளில் குடியிருந்தவர்கள் எல்லாருக்குமே அது சோதனைதான்.சுதேச மரங்கள் ஆல்லாத பிறநாட்டு மரங்களுக்கும் அது சோதனைதான்.
புயல் வேகம் எடுத்தபோது டயலொக் தொலைத்தொடர்பு சேவை செயலிழந்து விட்டது. முல்லைத்தீவு மாவட்டம் போன்ற சில மாவட்டங்கள் பெருமளவுக்கு தனித்து விடப்பட்டன.அனர்த்த காலங்களில் தொலைத் தொடர்பும் ஓர் அத்தியாவசிய சேவைதான். மீட்புப் பணிகளுக்கும் உதவிகளைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் தொலைத்தொடர்பு அத்தியாவசியமானது.அந்த அடிப்படையில் பார்த்தால் டயலொக் நிறுவனத்தின் மீதான நம்பிக்கைகளை புயல் அடித்துக் கொண்டு போய்விட்டது.தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படுவது டயலொக் சிம்தான்.அனர்த்த காலத்தில் அது தமிழ் மக்களை தொம் என்று கைவிட்டது.
மாறாக மோபிட்டல், ஹட்ச் போன்ற சிம்கள் ஆபத்துக்கு உதவின. புயல் வடக்கை கடந்த நாளில் யாழ்ப்பாணத்தில் டயலொக் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. மோபிட்டல், ஹட்ஜ் அலுவலகங்களுக்கு முன் மக்கள் புதிய சிம்மை வாங்குவதற்காக வரிசையாக காத்து நின்றார்கள்.தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க தவறிய டயலொக் நிறுவனம் அதற்கு பொறுப்பு கூற வேண்டும். ஆபத்தான, அனர்த்த காலம் ஒன்றில் தனது வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவையை வழங்க முடியாமல் போனதற்காக அவர்கள் பொறுப்பு கூற வேண்டும். அவர்களை பொறுப்புக் கூற வைக்க வேண்டும். தொலைத் தொடர்பு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் இனிவரும் நாட்களில் பேசத் தொடங்கும் போது டயலொக் சிம் காரணமாக தொடர்பிழந்து அதனால் ஏற்பட்ட சேதத்தின் அளவு மேலும் தெரிய வரலாம்.
பொதுவாக அனர்த்த காலங்களில் முப்படைகள்தான் மீட்புப் பணிகளுக்கு இறக்கப்படுவார்கள். அதுவோர் உலக நடைமுறை. ஓர் அரச கட்டமைப்பில் நன்கு நிறுவனமயப்பட்ட,போதிய அளவு பொருத்தமான வளங்களோடு, ஆபத்தான வேளைகளில் எப்பொழுதும் சேவைக்குத் தயாராக இருப்பது படைத்தரப்புத்தான்.நவீன அரசு கட்டமைப்புக்குள் ஆபத்துக்கு உடனடியாக களமிறக்கப்படுவது படைத்தரப்புத் தான்.
முகநூலில் தமிழ் அரசியல்வாதி ஒருவர்,முன்பு பிரதேச சபையில் உறுப்பினராக இருந்தவர், ஒரு குறிப்பை எழுதியிருந்தார். ராணுவமே வெளியேறு என்று கேட்டவர்கள் இப்பொழுது எங்கே? என்று.யுத்த காலங்களில் படைத்தரப்பே களத்தில் இறக்கப்படுவது என்பது ஒரு நவீன அரசின் நடைமுறை. கடந்த வரவு செலவுத் திட்டத்திலும்கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,படைத்தரப்புக்குத் தான் ஒப்பீட்டளவில் அதிகளவு நிதியை ஒதுக்கியிருந்தது. அதுதொடர்பான சர்ச்சைகள் முடிவதற்கு இடையில் புயல் படைத்தரப்புக்கு புதிய பொறுப்புகளைக் கொடுத்தது. மண் சரிவுகளில் இருந்தும் வெள்ளப்பெருக்கில் இருந்தும் படைத்தரப்பு மக்களை ஆங்காங்கே பாதுகாத்தது, காப்பாற்றியது. ஆனால் அது அவர்களுடைய கடமை. அதற்குத்தான் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது.அனர்த்த காலங்களில் உதவவேண்டும் என்பது படைத்தரப்புக்குரிய கட்டாயப் பணிகளில் ஒன்று.
“ஒரே நாடு ஒரே தேசம்” என்று கூறும் ஓர் அரசுக் கட்டமைப்பானது ஆபத்தான வேளைகளில் அந்த ஒரே நாட்டுக்குள் தனது படையினரை அனுப்பி மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேசம் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் அரசாங்கம் தனது படைக்கட்டமைப்பில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியை தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கிறது.எனவே ஆபத்தான வேளை, குறிப்பாக இயற்கை அனர்த்தங்களின்போது அந்த ஒரு நாட்டுக்குள்,ஒரு தேசத்துக்குள் யார் பாதிக்கப்பட்டாலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இல்லையென்றால் இந்த ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்கள் உண்டு என்பதை அவர்களே ஏற்றுக் கொண்டதாகிவிடும்.
தமிழ் அரசியல்வாதிகள் படைமய நீக்கத்தை கேட்பது ஓர் அரசியல் கோரிக்கை.அந்த கோரிக்கைக்குப் பின்னால் உள்ள அரசியலை விளங்கிக் கொள்ளாமல், அந்த அரசியலையும் இயற்கை அனர்த்த காலத்தில் படையினர் சேவையில் இறக்கப்படுவதையும் ஒப்பிட முடியாது.அனர்த்த காலங்கள் படையினரை மனிதாபிமானக் கட்டமைப்பாக மேலுயர்த்துகின்றன.அதே சமயம் ஒருபகுதி வியாபாரிகள் மனிதாபிமானத்தை இழப்பதும் அப்பொழுதுதான். புயலடித்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்தது என்றும் கூறலாம். பச்சை மிளகாய் தொடக்கம் இஞ்சி வரை விலை பல மடங்காக அதிகரித்தது.தம்புள்ளையிலிருந்து காய்கறிகள் வராதபடியால் விலை அதிகரித்தது என்று திருநெல்வேலி சந்தையில் ஒரு வியாபாரி கூறினார். நிச்சயமாக புயலுக்கு முன்னர் வந்த மரக்கறிகளைத்தான் அவர்கள் புயல் நாளில் விலையைக் கூட்டி விற்கிறார்கள். ஏனென்றால் வெள்ளம் புயல் காரணமாக பாதைகள் அடைபட்ட பின் தம்புள்ளவிலிருந்து மரக்கறி வரவில்லை.எனவே புயல் நாளில் விலையைக் கூட்டியது என்பது லாப நோக்கிலானது.
ஒருபுறம் மரக்கறி வியாபாரிகள் புயலை வைத்து விலையைக் கூட்டினார்கள். இன்னொருபுறம் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மழையில் நனைந்தபடி ஓய்வு உறக்கமின்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். தன்னார்வலர்களும் அரசியல்வாதிகளும் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் இடங்களில் காணப்பட்டார்கள்.
வழமைபோல இந்த முறையும் இந்தியாதான் முதலில் உதவியது. இலங்கைத் தீவின் அனர்த்த காலங்களில் முதலில் உதவிக்கு வருவது இந்தியாதான். அனுர அரசாங்கத்துக்கு இந்தியா தானாக முன்வந்து உதவிகளை வழங்கியது. காங்கேசன் துறை முகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா முதலில் 63.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகக் கொடுக்க முன்வந்தது. அதை அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.இந்தியா பின்னர் அந்தக் கடனை கொடையாக மாற்றியது. இப்பொழுதிருக்கும் அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய கொடையை ஏற்றுக்கொள்ள மறுத்த அனுர அரசாங்கம், அனர்த்த காலத்தில் இந்தியா வழங்கிய உதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளது.
1971ஆம் ஆண்டு ஜேவிபி அதாவது இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடித்தளமாகக் காணப்படும் இயக்கம்,அரசாங்கத்திற்கு எதிராக ஓர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அப்போதிருந்த அரசாங்கத்தைக் காப்பாற்ற முதலில் உதவிக்கு வந்தது இந்தியாதான். இந்தியாவின் உதவி காரணமாக அப்போதிருந்த சிறிமாவோ அரசாங்கம் அந்த ஆயுதப் போராட்டத்தை குரூரமான விதங்களில் முறியடித்தது. அன்றைக்கு இந்தியாவின் உதவியோடு ஜேவிபி ஒடுக்கப்பட்டது.இன்றைக்கு ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட ஒர் அரசாங்கம் ஆட்சிசெய்யும் காலகட்டத்தில், இந்தியாவின் உதவிதான் முதலில் கிடைத்திருக்கிறது.1971ஆம் ஆண்டு இந்தியாவின் உதவி ஜேவிபியைத் தோற்கடிக்க உதவியது. அரை நூற்றாண்டின் பின் அதாவது 54 ஆண்டுகளின் பின் அதே இந்தியாவின் உதவி ஜேவிபி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக வந்திருக்கிறது. பைபிளில் கூறப்படுவது போல “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை”.












