தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே இரண்டாவது நாளாகவும் மோதல்கள் தொடரும் நிலையில், கம்போடியாவின் சக்திவாய்ந்த செனட் தலைவர் ஹுன் சென் (Hun Sen) இன்று (09) தாய்லாந்திற்கு எதிராக தனது நாடு கடுமையான போராட்டத்தை நடத்தும் என்று சபதம் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தாய் சிப்பாய் கொல்லப்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலானது மீண்டும் தொடங்கியது.
இது கடந்த ஜூலை மாதம் ஐந்து நாட்கள் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தின் கீழான பலவீனமான போர்நிறுத்த்தையும் தடம் புரளச் செய்தது.
இதன் விளைவாக இரு தரப்பிலும் பல பொது மக்களும், இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர், மேலும் 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதிய மோதலின் விளைவாக ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் கம்போடியாவின் இராணுவம் இன்று அறிவித்தது.
அதேநேரம், கம்போடியாவின் அண்மைய தாக்குதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் தாய் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.













